.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
உத்தரப்பிரதேசத்தில் காண்பூரில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சட்ட விரோதமாக நடந்து வந்த சிறுநீரக உறுப்பு தானத்தை கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய ஐந்து டாக்டர்கள் ஒரு இடைத்தரகரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவருக்கு பேசிய பணத்தை வழங்காமல் இழுத்தடித்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் உடல் உறுப்பு தானம் சட்டரீதியாகவே நடக்க வேண்டும். பொதுவாக கல்லீரல் சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை உறவினர்களிடமிருந்து நோய்வாய் பட்ட நபர் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. இந்த சூழலில் ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி ஒரு சிலர் சட்ட விரோதமாக உடல் உறுப்பு தானத்தை பெற்று வருகின்றனர்.
அப்படி ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்துள்ளது. பீகாரை சேர்ந்த ஆயுஷ் என்ற எம்பிஏ பட்டதாரி ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர். வேலை நிமித்தமாக தற்போது உபியின் மீரட்டில் வசித்து வருகிறார். இவரது வறுமையை அறிந்து கொண்ட சிவம் அகர்வால் என்பவர் எட்டு ஆண்டுகளாக சிறுநீரக செயல் இழப்பால் அவதிப்பட்டு வரும் தன் உறவினருக்கு சிறுநீரக தானம் தரும்படி கேட்டுள்ளார். இதற்காக 10 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் ஆசை காட்டியுள்ளார்.
குடும்ப வறுமையை போக்க இதற்கு ஆயுசும் சம்மதித்து, காண்பூரில் உள்ள கல்யாண்பூர் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் வைத்து அவரது சிறுநீரகம் அகற்றப்பட்டது. பின்னர் அதை மீரட்டை சேர்ந்த பரோல் தோமர் என்பவருக்கு 60 லட்சத்திற்கு விற்று, சிவம் அகர்வால் உள்ளிட்ட கும்பல் பெரும் லாபம் பார்த்துள்ளது.
போதாக்குறைக்கு பேசியபடி 10 லட்சம் ரூபாய் வழங்காமல் வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே ஆயுஷ் என்பவரிடம் கொடுத்துள்ளனர் இதனால் ஏமாற்றப்பட்டது உணர்ந்த ஆயுஷ். இது பற்றி போலீசாரிடம் புகார் அளிக்க சட்டவிரோத உடல் உறுப்பு தானம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.
ஆயுஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு துணை போன மெட்லைப் அகுஜா மற்றும் பிரியா ஆகிய மூன்று தனியார் மருத்துவமனைகளுக்கு சீல் வைத்தனர். அத்துடன் அந்த மருத்துவமனையின் உரிமையாளர்களான டாக்டர் ப்ரீத்தி அகுஜா அவரது கணவர் டாக்டர் சுஜித் சிங் அகுஜா மருத்துவ நிபுணர்கள் ராம் பிரகாஷ், ராஜேஷ் குமார் மற்றும் சட்டவிரோத உடல் உறுப்பு தானத்திற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ நிபுணர் நரேந்திர சிங் ஆகியோரை கைது செய்தனர்
மேலும் டெலிகிராம் செயலி மூலம் மூளைச்சலவை செய்து இளைஞர்களையும், இளம் பெண்களையும் குறி வைத்த இடைத்தரகர் சிவம் அகர்வாலையும் கைது செய்தனர். கைதான 6 பேர் மீதும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
முதற்கட்ட விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 முதல் 60 சட்ட விரோத உறுப்பு மாற்றி அறுவை சிகிச்சை நடத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பலுக்கு லக்னோ, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் நேபாளம் வரை தொடர்பு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கிடையே சிறுநீரக கொடையாளரும் அதைப் பெற்றவருக்கும் உடல்நிலை மோசமடைந்ததால் இருவரும் மேல் சிகிச்சைக்காக லாலா லஜ் பத்ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.