சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தாலும், யார் காங்கிரஸ் முதலமைச்சர் என்பதை முடிவு செய்ய அந்தக் கட்சி மிகவும் திணறியது பழைய கதை. கட்சி மேலிடம் சித்தராமையாவுக்கும் அவருக்குப் போட்டியாக விளங்கும் டி கே சிவகுமாருக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்து, சித்தராமையா முதலமைச்சர் ஆவதற்கு வழி செய்து கொடுத்தது.
ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல் இரண்டரை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதலமைச்சராக இருப்பது என்பதுதான் காங்கிரஸ் கட்சி மேலிடம் உருவாக்கிய சமாதான பார்முலா என்று சொல்லப்பட்டது.
மொத்தம் 224 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்டது கர்நாடக சட்ட மன்றம். இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 135. பா.ஜ.க.வுக்கும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் முறையே 66 எம்.எல்.ஏ.க்களும் 19 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.ஆனால், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள். சித்தராமையா ஆதரவாளர்கள், சிவகுமார் ஆதரவாளர்கள் என்று இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.
சித்தராமையா பதவி ஏற்பதற்கு முன்பாக கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பு, அவர் முதல்வராகப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து சற்றே அடங்கி இருந்தது. ஆனால், அண்மைக் காலமாக, சிவகுமார் ஆதரவாளர்கள், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், தங்கள் தலைவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கருத்தை பொது வெளியில் வலியுறுத்தி வருகிறார்கள்.
அண்மையில் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவான அஷோக் பட்டன் என்பவர், மீண்டும் சிவகுமார் சர்ச்சையை எழுப்பி இருக்கிறார். ”கர்நாடக மந்திரி சபையில் மாற்றம் கோண்டுவரவேண்டிய தருணம் வந்துவிட்டது” என்று கொளுத்திப் போட, மறுபடியும் சர்ச்சைத் தீ பற்றிக் கொண்டு விட்டது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல, பசவராஜ் சிவகங்கா என்ற காங்கிரஸ் எம் எல் ஏ. தன் பங்குக்கு, ‘காங்கிரஸ் எம் எல் ஏ க்களில் சுமார் 70 பேர், சிவகுமார் முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று ஒரு குண்டைப் போட்டிருக்கிறார்.
இந்த செய்தி வெளியானதும், கலக்கமுற்ற சித்தராமையா தன் ஆதரவாளர்களான எம் எல் ஏ களிடம் பேசி, தன் பொசிஷனை வலுப்படுத்திக் கொள்ளும் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது..
சிவகுமார் தன் பங்குக்கு தன் ஆதரவு எம் எல் ஏ கோஷ்யிடம், “ பொது வெளியில், இப்படி ஓப்பனாக முதலைச்சருக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம். அமைதியாக இருங்கள்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.