
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 2-வது கட்டமாக தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் மங்களூரு, சிக்கமகளூரு உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இந்த தொடர் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு, வீடு இடிந்து விழுதல் போன்ற சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மங்களூருவில் 4 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல்குனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், மங்களூரு நகரில் தண்ணீர் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பம்ப்வெல், கைகம்பா, பஜ்பே, கோனஜே உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மங்களூரு மட்டுமின்றி பெல்தங்கடி, சுள்ளியா, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. பெல்தங்கடியில் கெட்டிகல்லு பகுதியிலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மங்களூரு-சோலாப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்குனி ஆறு மட்டுமின்றி பெல்தங்கடியில் ஓடும் நேத்ராவதி, குக்கே பகுதியில் ஓடும் குமாரதாரா ஆகிய ஆறுகளிலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுவதால் ஆறுகளின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோர பகுதி மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உடுப்பி மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அங்கு இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இருநாட்களாக இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இதேபோல் மற்றொரு கடலோர மாவட்டமான உத்தரகன்னடாவிலும் பேய் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காளி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. சிர்சி-குமட்டா சாலையில் உள்ள தேவிமனே மலை, சிரூர் மலை பகுதிகளில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய நெஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், வாகனங்களை சாலையோரம் நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் கடந்த 6 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. சிவமொக்கா அருகே காஜனூரில் உள்ள துங்கா அணை நிரம்பியதால், 22 மதகுகள் வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் துங்கா ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
குடகு மாவட்டத்தில் பல பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலையில் அபாய கட்டத்தில் உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளூர் மக்கள் பயணிக்க படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வடகர்நாடக மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ராய்ச்சூர், பாகல்கோட்டை, பெலகாவி, யாதகிரி உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டுகிறது. மேலும் எல்லையில் உள்ள மராட்டிய மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருவதுடன், அங்குள்ள அணைகளில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தையும் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதற்கிடையே மேலும் 2 நாட்களுக்கு மிககனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.