
ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயில் மக்களை படாய்படுத்தி விடும். அந்த வகையில் இந்தாண்டு மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதுவும் அக்னி நட்சத்திரம் மே 4-ம்தேதி தொடங்கியதில் இருந்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சில மாவட்டங்களில் 110 டிகிரி தாண்டிய வெயிலின் வெப்பத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானர். எங்கே இந்த வெயிலின் கொடுமை இன்னும் அதிகரிக்கக் கூடுமோ என்று மக்களிடையே அச்சம் நிலவிவந்த வேளையில் திடீரென தமிழ்நாட்டில் கோடை மழை பெய்யத் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதுமட்டுமின்றி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு மூன்று தினங்களுக்கு முன்பே தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். மேலும் மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் 2 நாட்களில் தொடங்கி, பின்னர் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பரவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுகளால், இன்று முதல் 27-ந் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக முதல் அதி கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 25, 26-ந் தேதிகளில் கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை பெய்யக்கூடிய பகுதிகளில் கனமழை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், மிக கனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், அதி கனமழை வரை பதிவாகும் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.