தமிழகத்துக்கு காவிரி நீர்: மேல்முறையீடு செய்ய கர்நாடகம் முடிவு!

தமிழகத்துக்கு காவிரி நீர்: மேல்முறையீடு செய்ய கர்நாடகம் முடிவு!
Updated on

மிழகத்துக்கு காவிரி நீர் வழங்குமாறு காவிரி ஓழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வரும் அக்டோபர் 16ம் தேதியிலிருந்து அக்டோர் 31ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடிவீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் இதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று காவிரி ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமை பரிந்துரைத்திருந்தது.

காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை காவிரி மேலாண்மை வாரியம் ஏற்று விரைவில் இது தொடர்பாக உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று தெரிகிறது.

கர்நாடக மாநில அணைகளுக்கு விநாடிக்கு 8,000 முதல் 9000 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாநில விவசாயிகளின் நலனை கருத்தில்கொள்ள வேண்டியுது. கர்நாடகத்தில் போதிய மழை இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழ்நிலையில் கர்நாடகம் இருக்கிறது என்று துணை முதல்வரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூருவில் சிறு மழைத்தூறல்கள்தான் பெய்துள்ளன. இது போதாது. எனவே காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்றார் அவர்.

மாநிலத்தில் மின் தட்டுப்பாடு இருப்பதால் விவசாயிகள் பம்பு செட்டுகளை இயக்க முடியாத நிலை இருக்கிறதே என்று கேட்டதற்கு, மாநிலத்தில் மின் பற்றாக்குறை இருப்பது உண்மைதான், மின்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் தருமாறு கேட்டுள்ளார் என்றார் சிவகுமார்.

காங்கிரஸ் கட்சியின் முந்தைய ஆட்சியில் நான் மின்துறை அமைச்சராக இருந்தபோது 12,000 மெகாவாட் கூடுதம் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தேன். ஆனால், அடுத்துவந்த பா.ஜ.க. ஆட்சியில் கூடுதல் மின்சாரத்துக்கான திட்டங்கள் பற்றி சிந்திக்கவே இல்லை என்றார் துணை முதல்வர் சிவகுமார்.

வறட்சியால் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் மின்தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் மழைபெய்ய இறைவனை பிரார்த்திப்போம் என்றார் அவர்.

logo
Kalki Online
kalkionline.com