
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா இன்று (28-11-2024, வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. பக்தர்களுக்கான அனைத்து வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்க உள்ள வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்துத்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கோவில் வளாகம், ரங்கோலி கோலங்கள் வரைதல், கியூலைன்கள், தடுப்புகள், தாயார் கோவில், மாட வீதிகளில் மின் விளக்கு அலங்காரம் போன்றவை செய்யப்பட்டுள்ளன.
இந்த முறை திருச்சானூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், பத்ம புஷ்கரணியின் நான்கு பக்கங்களிலும் பக்தர்கள் பிரம்மோற்சவத்தை காணும் வகையில் மொத்தம் 20 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் புஷ்கரணிக்கு வருவதற்கும், புனித நீராடி விட்டு திரும்புவதற்கும் வாயில்கள், பக்தர்கள் தேவைப்படும் இடங்களில் தற்காலிக கழிப்பறைகள், சைன் போர்டுகள், ரேடியோ மற்றும் ஒலிபரப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு டிசம்பர் 5-ந்தேதி மாலை முதல் பக்தர்கள் காத்திருக்கும் வகையில், மேல்நிலைப்பள்ளி, புடி ரோடு, நவஜீவன், திருச்சானூர் கேட் ஆகிய இடங்களில் 4 காத்திருப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 120 கவுண்ட்டர்கள் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு குடிநீர், பாதாம் பால், பிசிபிலா பாத், தயிர் சாதம், உப்மா போன்றவை வழங்கப்படும். இம்முறை கூடுதலாக சர்க்கரை பொங்கல் பக்தர்களுக்கு வழங்கப்படும். தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு சாதம், பருப்பு, சாம்பார், ரசம், இனிப்பு போன்ற அறுசுவை உணவு வினியோகம் செய்யப்பட உள்ளது.
பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பதற்காக அலிபிரியில் இருந்து திருச்சானூர் வரை ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஊர்வலத்தில் 1000 நடன கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி 460 தேவஸ்தான பாதுகாப்புப் படையினரும், போலீசாரும், பஞ்சமி தீர்த்த நாளில் 1500 போலீசாரும், 600 பாதுகாப்புப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரம்மோற்சவ விழா நாட்களில் 500 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும், பஞ்சமி தீர்த்த நாளில் 1000 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும், இதுதவிர 200 சாரண-சாரணியர்களும் பக்தர்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான டிசம்பர் 6-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு திருமலையில் இருந்து ஏழுமலையான், பத்மாவதி தாயாருக்கு அனுப்பி வைக்கும் பட்டு வஸ்திரம் வழக்கம்போல் வரும்.
6-ந்தேதி காலை 10 மணிக்கு தாயார் உற்சவருக்கு திருமஞ்சனம், மதியம் 12.15 மணிக்குள் பத்ம புஷ்கரணியில் பஞ்சமிதீர்த்தம் எனப்படும் சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடலாம்.