கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி கேள்வி!

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை விதிக்க மதுரை அமர்வு மறுப்பு; தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை ஜூலை 29-க்குள் பதிலளிக்க ஆணை!
மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்
Updated on

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இந்த கேள்வியை எழுப்பி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு முக்கிய கோவில்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 3,084.95 ஏக்கர் நிலங்கள் (471 சர்வே எண்கள்) மீதான பத்திரப்பதிவு தடையை நீக்கி, மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் உத்தரவிட்டன. கடந்த 1963 ஆம் ஆண்டு சட்டத்தின் படி ரயத்துவாரி பட்டா பெற்று, பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் வசித்து வரும் மற்றும் விவசாயம் செய்துவரும் சுமார் 3,390 பேருக்கு இந்த உத்தரவு மூலம் பத்திரப்பதிவு செய்யும் உரிமை மீண்டும் கிடைத்தது.

இந்த நிலங்களின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுவதால், இந்த உத்தரவு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கும் செயல் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் திமுக மற்றும் தவெக அரசுகள், இது புதிய நில ஒப்படைப்பு அல்ல என்றும், நீண்ட காலமாக பட்டா வைத்திருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட நிர்வாக சிக்கலைத் தீர்க்கும் நடவடிக்கை என்றும் விளக்கம் அளித்தன. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கரூர் மாவட்டம் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில், அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கான 15 கிராமங்களில் உள்ள 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு பதிவுத்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலங்களை ஆக்கிரமித்த சுமார் 3,390 நபர்கள் அளித்திருந்த மனுக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இது முன் அனுமதி பெறாமல் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வழிவகை செய்கிறது. இது செல்லத்தக்கது அல்ல. எனவே பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கரூரில் இனாம் நிலங்களை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன என்பது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு தரப்பில் ஜூலை 29ஆம் தேதி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : உள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டியிடவும் தயார்-மு. வீரபாண்டியன்.!
மதுரை உயர் நீதிமன்றம்
logo
Kalki Online
kalkionline.com