

கரூர் துயரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது எனும் தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025-ல் செப்டம்பர் 27 அன்று சட்டமன்றத் தேர்தலுக்காக கரூர் நகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
தவெக தலைவரும் தற்போதைய தமிழ்நாடு முதல்வருமான விஜய் கரூரில் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசல் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் உயிரிழந்தவர்களில் 10 குழந்தைகள் மற்றும் பெரும்பாலானோர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர் என்றும் துயர சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகின.
சம்பவம் நிகழ்ந்ததும் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்து ஆறுதல் கூறாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றது முதல் அப்போது ஆட்சியில் இருந்த திமுகவை சேர்ந்த அமைச்சர் உள்ளிட்டோர் உடனடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி தேவையான மருத்துவ உதவிகள் வழங்கியதும் இரு கட்சிகள் மற்றும் பொது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களை வழங்கியது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போடப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் தற்போது நடைபெற்று வரும் சி.பி.ஐ (CBI) விசாரணையில் தவெக தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது . இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. பல முறை விசாரணை நடத்தி உள்ளது.
தொடர்ந்து வந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி தமிழ்நாடு முதல்வரானார் தவெக கட்சியின் தலைவர் விஜய். அவருடன் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் பதவி மற்றும் எம்ல்ஏக்களாக பதவியேற்றனர்.
மேலும் கரூர் சம்பவத்துக்கு எதிர்க்கட்சியான திமுகவின் சதியே காரணம் என தவெகவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இரு கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இச்சம்பவத்திற்கு முந்தைய திமுக ஆட்சியும் காவல்துறையும்தான் காரணம் என்று குற்றம் சாட்டி, "கணக்கு தீர்க்கப்படும்" எனக் காட்டமாக சவால் விடுவது போல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில் பகிரங்கமாக மக்கள் இடையே பொறுப்பு மிகுந்த அமைச்சர் இப்படி பேசுவதா என மக்களும் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக முதல்வர் விஜய் கரூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அரசு நிவாரண உதவிகள் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சாட்சிகள் கலையும் எனவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் இவையனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆதவ் அர்ஜூனின் பேச்சு தொடர்பாக திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக தவெக தலைவர்கள் மீது சி.பி.ஐ விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்கள் இச்சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது மற்றும் சாட்சிகளைத் திசைதிருப்ப வாய்ப்புள்ளதாகக் கூறி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்கக்கோரியும் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் படி கரூர் துயரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து கரூருக்கு விஜய் தாமதமாக வந்ததும் ஒரு காரணம் கரூக்கு பகல் 12 மணிக்கு வருவதாக சொன்ன விஜய் இரவு 7 மணிக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் என்னைப் பொருத்தவரை கரூர் சம்பவத்திற்கு விஜயும் ஒரு காரணமாக இருப்பார் எனவும் பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் கரூர் மக்களை 7 மணி நேரம் விஜய் காக்க வைத்த நிலையில் மக்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை .அந்த மக்களை சந்திக்காமல் சென்னை சென்றார் விஜய். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில் அதை கவனிக்காமல் முதல்வர் விஜய் குதிரை பேரம் செய்கிறார் எனவும் நயினார் குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தீவிரமான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை உருவாக்கியுள்ளதுடன் வழக்கு எப்படி செல்லும் என அறியும் அனைவரும் ஆவலாக உள்ளனர் எனலாம்.