
நம் வீட்டில் அல்லது நமக்கு வேண்டியவர்கள் எவரேனும் இறந்தால் அவர்களது அஸ்தியை காசிக்கு எடுத்துச் சென்று கங்கை நதியில் கரைப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வரும் ஓர் வழக்கம்.
அப்படி செய்வதால் அவர்கள் ஆன்மா மோட்சத்திற்கு செல்வதாக ஒரு நம்பிக்கை. ஆனால் காசிக்கு எல்லோராலும் சென்று வர முடியுமா என்ன? அப்படி செல்ல இயலாதவர்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் உதவி செய்கிறது காசி குமாரசாமி மடம்.
தமிழையும் சைவத்தையும் பரப்புவதற்காக தோன்றிய தமிழக ஆதினங்களில் ஒன்றே திருப்பனந்தாளில் இயங்கி வரும் புகழ்பெற்ற காசி மடம். மகான் குமரகுருபரால் தோற்றுவிக்கப்பட்டது.
இம்மடத்தின் கிளையே காசி நகரிலுள்ள
குமாரசாமி மடம். இம்மடம் 350 ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டில் இருந்து காசி யாத்திரை செல்பவர்களில் பெரும்பாலானோர் இந்த மடத்தில் தான் தங்குவது வழக்கம்.
இம்மடமானது பணம் செலவழித்துக்கொண்டு காசிக்கு வந்து அஸ்தியை கரைக்க முடியாதவர்களுக்காக கைங்கர்யமாக. இந்த சேவையை பல்லாண்டுகளாக ஓசையின்றி செய்து வருகின்றது.
இறந்தவர்களின் அஸ்தியை பெயர், ஊர், இறந்த தேதி, திதி, ஆண் அல்லது பெண் போன்ற விவரங்களுடன் காசி குமாரசாமி மடத்திற்கு கொரியரில் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புவோர் தங்களது முகவரியை ஆங்கிலத்தில் தெளிவாக எழுத வேண்டும். கூடவே கட்டணமாக ரூபாய் 500 அனுப்பி வைக்க வேண்டும். இது அஸ்தியை கங்கை நதியில் கரைத்து விட்டு காசி விசுவநாதர் கோயிலில் இறந்தவர்களின் பெயரில் பூஜை செய்யும் ஐயருக்கான கட்டணமாகும்.
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அஸ்தி சேர்ந்தவுடன் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இதன் பின்னர் காசி மடம் தன்னுடைய செலவில் பிரசாதம் அனுப்பி வைக்கிறது.
காசி குமாரசுவாமி மடத்தின் இச் சேவையைப் பற்றி அறிந்து கொள்ள அங்குள்ள மேனேஜர் (தமிழர்) திரு.சம்பத்குமார் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அவரது மொபைல் நம்பர் 87546 05272.