
கத்ரீனா கைஃப்பிற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. அவரது நடிப்புத் திறமை, அழகு மற்றும் வசீகரம், கவர்ச்சிகரமான உடற்தகுதி நெளிந்து ஆடும் தனது ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இன்று வரை கனவுக்கன்னியாக வலம் வரும் இவர், பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பாலிவுட் திரைப்படமான ‘பூம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த பாலிவுட் கனவுக்கன்னி காத்ரினா கைஃப், இந்தி சினிமாவில் கவர்ச்சிப்புயலாக உலா வந்தார்.
இந்நிலையில் மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா-மாலத்தீவு உறவில் ஏற்பட்ட விரிசல் தொடர்ந்து வருகிறது. இந்த விரிசல் மக்களிடையேயும் சுற்றுலா உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மோசமான சூழலில் இருந்து சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் மாலத்தீவு அதன் பொருளாதாரத்திற்காக சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளன.
மாலத்தீவில் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு, கண்களுக்கு விருந்தளிக்கும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பிரத்தியேக ஆடம்பர அனுபவங்களை அனுபவிக்க, அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘Visit Maldives’ன் சிறப்பு கோடைக்கால பிரச்சாரத்தின் தூதராக கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கோடை விற்பனை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பூட்டிக் ஹோட்டல்கள், சொகுசு ரிசார்ட்டுகள் மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற மாலத்தீவு விடுமுறைகள் குறித்த பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகின்றன.
உலகளாவிய பிராண்ட் தூதராக தனது நியமனத்தை ஒப்புக்கொண்ட கத்ரீனா கைஃப், மாலத்தீவு வழங்கும் ஆடம்பரத்தையும் அழகையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் ஆர்வமாகவும், உற்சாகமாக இருப்பதாகவும் கூறினார்.
மாலத்தீவுகளின் தேசிய சுற்றுலா வாரியம் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனது சமூக ஊடகப் பக்கம் வெளியிட்டது. அதில், "எங்கள் உலகளாவிய பிராண்ட் தூதராக பாலிவுட்டில் முக்கிய முகமான கத்ரீனா கைஃப் இருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையைத் தரும் தருணம்", என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது.