மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், தில்லி, ஐந்தர்மந்தரில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு..
”கேரளத்துல இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுறேன். நேற்று கர்நாடக மாநில முதலமைச்சர் மாண்புமிகு திரு. சித்தராமையா அவர்களும் டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்.
இன்று திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதிப்பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான ஒன்றிய பாஜக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களிடம் ஒரு கருத்தை சொன்னார்.
“தமிழ்நாட்டின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட டெல்லிக்கு வரத் தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழ்நாட்டில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றித் தருவேன்” என்று சொன்னார். மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள். ஆனால், பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் – மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார்.
மாநிலங்கள் இருப்பதோ - மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதோ –அவருக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர் அவர்.
ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையைப் பறித்ததுதான். நிதி உரிமையை பறித்தார்; கல்வி உரிமையை பறித்தார்; மொழி உரிமையை பறித்தார்; சட்ட உரிமையை பறித்தார்.
மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பா.ஜ.க முதலமைச்சர்கள் நினைக்க வேண்டாம்.
நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாவே சொல்ல விரும்புகிறேன். பா.ஜ.க அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதலமைச்சர் காம்ரேட் பினராயி விஜயன் அவர்களும் போராடி வருகிறார்.
ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குப் பிறகு மாபெரும் நிதி நெருக்கடிப் பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம்.
அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய ஒன்றிய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்குகிற வகையில் செயல்பட வேண்டும். ஆனால் அப்படி செயல்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் வாங்குவதற்கு கூட தடையை ஏற்படுத்துகிறார்கள். மாநிலங்களுடைய பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வது மாநில அரசுகள்தான்.
மாநில அரசிடம் தான் எல்லா அன்றாடத் தேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும்.
'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலமாக, இந்திய அரசைக் கைப்பற்றி, பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் – சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்!
காம்ரேட் பினராயி விஜயன் அவர்களுக்கும் கேரள அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்” என கூறியுள்ளார்.