

கேரள மாநிலத்தில் ஜனவரி மாதம் முதல் ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று பரவி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை கேரள மாநிலத்தில் 135 பேருக்கு இந்த தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த தொற்று அதிகமாக கோழிக்கோடு மாவட்டத்தில் தான் பரவி வந்துள்ளது. இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் 68 பேருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கேரளா மாநிலம் முழுவதும் இதுவரை 5 பேர் ஷிகெல்லா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
இதில் மூன்றாவது நபர் கோழிக்கோடு அருகே உள்ள மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 54 வயது பெண்மணி ஆவார். கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் தீவிர சிகிச்சைகள் பெற்று வந்தார்.ஆயினும் அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவிற்குப் பின்னரே அவருக்கு ஷிகெல்லா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
கடந்த மாதங்களை விட தற்போதைய ஜூன் மாதத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் அதிவேகமாக இந்த பாக்டீரியா தொற்று பரவி வருகிறது. தற்போது 12 பேருக்கு புதிதாக ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின பையோலி நகராட்சியில் 9 ஒன்பது வயது சிறுவனுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த சிறுவனின் 3 மூன்று வயது உறவினர் சிறுவனும் இதே தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தான்.
தற்போது நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால் 4 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் இருவரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்களுக்குச் சிறுநீரகப் பாதிப்பு போன்ற தீவிரப் பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்க மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோழிகோட்டை கடந்து வயநாட்டிலும் அந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 16 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேகமான பரவல் காரணமாக மலப்புரம் மாவட்டத்தில் தற்போது சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இத தவிர திருச்சூர் கொல்லம் ஆகிய மாவட்டங்களிலும் 6 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கட்டக்கடா கேஎஸ்ஆர்டிசி (KSRTC) அரசு பேருந்து வளாகத்திற்குள், உள்ள தனியார் பேக்கரியின் உணவில் ஷிகெல்லா பாக்டீரியாவின் தடயங்கள் கண்டறியப்பட்டன. மேலும் ஒரு இளநீர் கடையில் உணவுப் பொருட்களில், ஷிகெல்லா பாக்டீரியா கண்டறியப்பட்டு அந்த கடை மூடப்பட்டு தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. கேரளா முழுக்க சாலையோர உணவகங்கள் ,குளிர்பான கடைகள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை தொடர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்
ஷிகெல்லா என்றால் என்ன?
இது ஒரு குடலை பாதிக்கும் பாக்டீரியா தொற்று , இந்தத் தொற்றின் காரணமாக கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஒருவர் மோசமான ஆரோக்கியத்தை அடைய கூடும். சில நேரங்களில் வயிற்றுப் போக்கில் ரத்தம் வெளியேறலாம். இதனுடன் காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை இருப்பது இதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது.