நம்மில் பலருக்குச் சாப்பிட்ட பிறகு வயிற்றில் ‘கடமுட’ என்றோ உருமல் போன்றோ சத்தம் கேட்பதைக் கவனித்திருப்போம். சில நேரங்களில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், பொதுவாக இது செரிமானத்தின் இயல்பான செயல்பாடே தவிர, நோயின் அறிகுறியல்ல. மருத்துவ ரீதியாக இந்த ஒலிகள் ‘போர்போரிக்மி’ (borborygmi) என்று அழைக்கப்படுகின்றன. உண்மையில் இந்த ஒலிகள் வயிற்றிலிருந்து வருவதில்லை. குடலிலிருந்தே உருவாகின்றன.
உணவானது செரிமானப் பாதை வழியாக நகரும்போது, குடல் தசைகள், ‘பெரிஸ்டால்சிஸ்’ (peristalsis) எனப்படும் அலை போன்ற இயக்கத்தில் சுருங்கி விரிகின்றன. அதே நேரத்தில் செரிமானச் சாறுகளும் வாயுவும் உணவு திரவங்களோடு கலக்கின்றன.
குடலானது குழாய் போன்ற வெற்று அமைப்பைக் கொண்டிருப்பதால், குழாய்களுக்குள் தண்ணீர் பாய்வதைப்போல, இந்த அசைவுகள் நீரோட்டம் போன்ற அல்லது குமிழி வெடிப்பது போன்ற சத்தங்களை உருவாக்குகின்றன.
சாப்பிட்ட பிறகு செரிமானம் மும்முரமாக நடைபெறும் போதோ பசியாக இருக்கும்போதோ இந்தச் சத்தங்கள் இன்னும் அதிகமாகவும் தெளிவாகவும் கேட்கக்கூடும். பெரும்பாலான நேரங்களில், வயிற்றிலிருந்து வரும் இத்தகைய சத்தங்கள் தீங்கற்றவை. இருப்பினும், சில உணவுப் பழக்கவழக்கங்கள் இவற்றை அதிகரிக்கச் செய்யலாம். மிக வேகமாகச் சாப்பிடுவது, சாப்பிடும்போது பேசுவது, உறிஞ்சுகுழல் (straw) மூலம் பருகுவது அல்லது சூயிங்கம் (chewing gum) மெல்லுவது போன்றவற்றால் அதிகப்படியான காற்றை உள்ளிழுக்க நேரிடுகிறது.
உடலிருந்து வாயு வெளியேறுவது (gas passing) பலருக்கு சங்கடமாக தோன்றினாலும், அது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான நல்ல அறிகுறியாகும். குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உணவை உடைக்கும்போது காற்று உருவாகிறது. இது ஜீரண அமைப்பு சரியாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. எனவே, இது ஒரு இயல்பான மற்றும் ஆரோக்கியமான செயலாக கருதப்படுகிறது.
சீரான இடைவெளிகளில் மலச்சிக்கல் நடைபெறுவது நல்ல குடல் ஆரோக்கியத்தை காட்டுகிறது.
வாரத்திற்கு 2 முறை முதல் 3 முறை வரை மலச்சிக்கல் நடைபெறுவது இயல்பானதாக கருதப்படுகிறது. இது உடலில் தேவையற்ற கழிவுகள் சரியாக வெளியேறுகின்றன என்பதைக் குறிக்கிறது.
வயிற்றில் ‘ரம்பிளிங்’ சத்தம் வரும் போது அது சங்கடமாக இருக்கலாம். ஆனால் இது குடல் செயல்பாடு சுறுசுறுப்பாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. உணவும் காற்றும் குடலில் நகரும் போது இந்த சத்தம் ஏற்படுகிறது. இது ஆரோக்கியமான ஜீரண அமைப்பின் அடையாளமாகும்.
பீன்ஸ், பருப்பு வகைகள், பால் பொருள்கள், முழு தானியங்கள், கிழங்கு வகைகள் மற்றும் ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற சிலுவைக் காய்கறிகள் வாயுவை அதிகம் உற்பத்தி செய்வதால், அவையும் இந்தச் சத்தத்தை அதிகரிக்கக்கூடும். லாக்டோஸ் அல்லது குளூட்டன் போன்ற உணவுப்பொருள் ஒவ்வாமைப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, குடலில் அதிகப்படியான வாயு, திரவம் சேர்வதால், வழக்கத்தைவிட அதிகமான சத்தம் ஏற்படலாம்.
மெதுவாகச் சாப்பிடுவது, உணவைச் சிறிது சிறிதாகப் பிரித்து உண்பது, பிரச்சினையைத் தூண்டும் உணவுகளைத் தவிர்ப்பது போன்ற மாற்றங்கள் வயிற்றில் ஏற்படும் சத்தத்தைக் குறைக்க உதவும்.
இஞ்சி, புதினா, பெருஞ்சீரகம் (சோம்பு) கலந்த தேநீர் போன்ற இயற்கை மருத்துவ முறைகளும் வாயுவைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் தான் நம் முன்னோர்கள் உணவில் ரசம் சேர்த்துக் கொண்டார்கள்.
குடல் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் போது எந்த விபரீதமான சப்தமும் எழாது. அதற்கு ஆரோக்கியமான நார்ச்சத்து மற்றும் புரோபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் இல்லாத மனநிலையை பராமரிக்க வேண்டும், தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஆரோக்கியமான தூக்க முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள்.
வயிற்றில் சத்தம் ஏற்படுவது பெரும்பாலும் கவலைக்குரியதன்று. ஆனால், இச்சத்தங்கள் தொடர்ந்து நீடித்தாலோ அதனுடன் கடுமையான வயிற்று வலி, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வாந்தி அல்லது காரணமில்லாத உடல் எடைக் குறைவு போன்றவை இருந்தாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.
மிக அரிதான சூழல்களில், கடுமையான அசௌகரியத்துடன் மிக அதிகமான சத்தம் கேட்டாலோ சத்தமே கேட்காமல் இருந்தாலோ அது குடல் அடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு உடனடி அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)