கேஎஃப்சி சிக்கன், மேகியில் புழுக்கள்: முன்னணி நிறுவனங்களுக்கு FSSAI அதிரடி நோட்டீஸ்!

பிரபல பிராண்டுகளின் உணவுப் பொருட்களில் புழு, பூச்சிகள் கண்டறியப்பட்டதால் உணவுப் பாதுகாப்பு ஆணையம் அதிரடி நடவடிக்கை.
Man scockin when noticed insect in food
Customer notice sworm in food AI image
Updated on

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஏலூரில் உள்ள 'எம்.வி.ஆர் மால்' வளாகத்தில் இருக்கும் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் வாடிக்கையார் வாங்கிய பொறித்த சிக்கனிலிருந்து புழுக்கள் நெளிவதைக் கண்டார். அதை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவம் முதன்முறையாக நடைபெறவில்லை , இதற்கு முன்னரும் பலமுறை கேஎஃப்சி நிறுவன சிக்கனிலிருந்து புழுக்கள் வரும் பிரச்சனைகள் இருந்துள்ளன.

இதை தொடர்ந்து மேகி நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டில், புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருந்ததாக சமூக வலைதளத்தில் மற்றொரு வாடிக்கையாளர் வீடியோவாக பதிவிட்டிருந்தார். பிளிப்கார்ட் மினிட்ஸ் நிறுவனமும் இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த நிறுவன டெலிவரி சேவையின் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ஓபன் சீக்ரெட் நிறுவன பேரீச்சம் பழ பாக்கெட்டிலும் பூச்சிகள் வெளிவந்துள்ளன .

சமீபத்திய இந்த தொடர் நிகழ்வுகள், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வீடியோக்களை நுகர்வோர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் , அது குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. மேலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது பற்றியும் சமூக வலைதளங்களை விவாதிக்கப்பட்டது.

இது போன்ற பதிவுகளை வெறுமனே கடந்து செல்லாமல் , இந்தியாவின் உணவு பாதுகாப்பு அமைப்பான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) உணவு பொருட்களை தற்போது தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளது. சமூக வலைதள புகார்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான நெஸ்லே (மேகி), கேஎஃப்சி, ஃபிளிப்கார்ட் மற்றும் ஓபன் சீக்ரெட் ஆகிய நிறுவனங்களுக்கு FSSAI அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Noodles packet contains Insects
Women schocking watch insects in noodlesAI image

FSSAI நிறுவனம் கேஎஃப்சி நிறுவனத்திற்கு அனுப்பிய நோட்டீசில் குறிப்பிட்ட பாதுகாப்பு விளக்கங்களை கோரியுள்ளது. உணவகத்தின் சுகாதாரம் மற்றும் தூய்மை , உணவுப் பொருட்கள் கையாளப்படும் விதம், உணவுக் கழிவுகள் மேலாண்மை , உணவகத்தில் புழு, பூச்சி, எலி போன்றவை வராமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பணிபுரியும் ஊழியர்களின் தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றைப் பற்றி விளக்கம் கேட்டிருந்தது

நெஸ்லே நிறுவனத்திற்கு FSSAI அனுப்பிய நோட்டீஸின்படி, சம்பந்தப்பட்ட புகார்களின் மீது, அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை பற்றிய அறிக்கை கேட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட உணவுப் பொருளை விற்ற விற்பனையாளரின் முழு விவரங்கள் , அதில் குறிப்பிடப்பட்ட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதா? அதன் தரம் சரியாக பரிசோதிக்கப்பட்டதற்கு உள்ள தர கட்டுப்பாடு பதிவேடுகள் பற்றிய தகவல்களை கோரி இருந்தது.

இந்த தவறு நடந்ததை அறிந்த பின்னர், பாதிப்புகள் கண்டறியப்பட்ட பேட்சுகளில் உள்ள மேகி பாக்கெட்களை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுகிறீர்கள்? என்று விளக்கம் கேட்டு பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டிருக்கின்றன. இந்த விவகாரம் வெளியில் தெரிந்த பின்னர் நெஸ்லே இந்தியா(Maggi) நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 3% மேல் சரிவைக் கண்டது.

​ஓபன் சீக்ரெட் மற்றும் பிளிப்கார்ட் மினிட்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட நோட்டீசில் உணவு பொருள் கிடங்குகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? பாதிக்கப்பட்ட பொருளின் மீது புகார் கூறப்பட்ட பின் அந்த தொகுதியில் உள்ள அனைத்து உணவு பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டதா? மேலும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

​FSSAI-ன் இந்த புதிய அணுகுமுறை நுகர்வோர் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, உணவுப் பொருட்களின் பாதுகாப்பின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

logo
Kalki Online
kalkionline.com