சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தமிழக அரசு கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மாற்றியது. கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் 80 சதவீத அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
வண்டலூர்-உரப்பாக்கம் அருகே ஜிஎஸ்டி சாலையில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2023 இறுதியில் திறந்து வைக்கப்பட்டது. தினமும் 1.3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு புறநகர் ரயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரயில் சேவை இல்லாமல் இருக்கிறது. இதனால், பஸ் நிலையம் வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மின்சார ரயிலில் வருபவர்கள் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களில் இறங்கி, கிளாம்பாக்கம் செல்ல ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அதிக செலவும், சிரமமும் ஏற்படுகிறது.இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை சரி செய்ய, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே புதிய ரயில் நிலையம் கட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக ஜனவரி 2024 இல் ரயில்வேக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மார்ச் 2024 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஜனவரி 2025க்குள் ரயில் நிலையம் செயல்படத் தொடங்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துடன் பேருந்து நிலையத்தை ஸ்கைவாக்குடன் இணைக்கும் பணிகள் ஜனவரியில் நடைபெறும் என்றும், ரயில் நிலையப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் அறிவித்துள்ளார். இதனால் சென்னை மக்கள் மற்றும் வெளியூர் செல்வோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.