கிளாம்பாக்கம் ரயில் நிலையம் சென்னை புறநகர் ரயில்வே நெட்வொர்க்கிற்காக கட்டப்பட்டு வரும் ஒரு புதிய ரயில் நிலையம் ஆகும். இது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பொது மக்களுக்கு சேவை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஜனவரி 2026 இல் திறக்கப்படும் என முன்னதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.
இந்த இரயில் நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே, வண்டலூர்-ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் பாதையில் அமைந்துள்ளது.தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற வேண்டிய ஆகாய நடைபாதை பணிகள் முழுமையாக முடியவில்லை.
சென்னை புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முழுமையாகிவிட்டன. ஆனால் இன்னமும் கிளாம்பாக்கம் இரயில் நிலையம் திறக்கப்பட தயார் நிலையில் இல்லை. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பொது மக்களுக்காக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் சென்னை பாரிமுனை, கோயம்பேட்டு ஆகியவற்றிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்றடைவது மிகவும் கடினமாக இருக்கிறது.
பேருந்து நிறுத்ததின் அருகிலேயே ரயில் பாதை சென்ற போதிலும் சென்னை மக்கள் ரயிலில் போய் இறங்க முடியாத நிலை உள்ளது. கிளாம்பாக்கத்திற்கு செல்வதற்கு பேருந்து சேவையை மட்டுமே பொது மக்கள் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ரயில் மூலம் பயணிப்போர் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி வெகு தூரம் நடந்து சென்றோ அல்லது ஆட்டோ மூலம் பயணித்தோ செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்ப்டும் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்தில் தற்போது அங்கு ஒரு நடைமேடை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மற்றோரு நடைமேடை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிந்தாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும்ஆகாய நடைபாதை அமைக்கப்பட்ட பின்னரே கிளாம்பாக்கம் இரயில் நிலையம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் கடந்த ஜூலை மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என முதலில் சொல்லப்பட்டு, பின்னர் அதை ஜனவரிக்கு தள்ளிவைத்திருக்கிறார்கள். தற்போது ஆகாய நடைபாதை அமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது. பேருந்து நிலையத்துக்கு முன்பு உள்ள சாலையின் குறுக்கே ஆகாய நடைபாதை செல்லும் வகையில் இரும்பு பாலத்தை தூக்கி நிறுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது. விரைவில் அந்த பணிகள் முடிவடைந்து ரயில் நிலையம் வரை நடைபாதையை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதேநேரம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைப்பதுடன், கழிவறை வசதி மற்றும் டிக்கெட் கவுண்டர் வசதி போன்றவையும் அமைக்க வேண்டியுள்ளது. எல்லா பணிகளையும் முடித்துவிட்டு திறந்தால் தான் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறப்பது ஒரு சவால்மிக்க பணியாக கருதப்படுகிறது. பணிகள் விறுவிறுப்பாக நடக்க வேண்டும். கிளம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.