
சிங்கங்களை வேட்டையாடுவது என்பது மற்ற விலங்குகளை வேட்டையாடுவது போலல்லாமல் பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக விளங்குகிறது. குறிப்பாக, சிலருக்கு காட்டின் அரசனான சிங்கத்தை வேட்டையாடுவது அவர்களது பரம்பரை கௌரவத்தைக் காப்பாற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சியை உள்ளடக்கியதாக உள்ளது. இது போன்றவர்கள் சிங்கத்தை வேட்டையாடி அதன் உடல் பாகங்களை பிறருக்கு காட்சிப்படுத்தி அதன் மூலம் பெரும் பணத்தை சம்பாதிக்கின்றனர்.
இன்னொரு புறம், சிங்கத்தின் உடல் பாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு வைத்தியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கள்ளச் சந்தையில் சிங்கத்தின் உடல் உறுப்புக்கள் அதிக தொகைக்கு விற்பனையாவதாலும், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் சிங்கத்தின் எலும்புகள், பற்கள் மற்றும் தோள்கள் உள்ளிட்ட அனைத்துமே கோடிக்கணக்கில் பணத்தை ஈட்டி தரும் ஒன்றாக உள்ளது. இது போன்ற காரணங்களுக்காகவே சிங்கங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன.
வன விலங்குகளின் அரசன் சிங்கங்கள் வேட்டையாடப்படுவதைத் தவிர்க்க முதலில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்தி கடுமையான தண்டனைகளை விதிப்பதன் மூலமாக, இத்தகைய சட்டவிரோத வேட்டை நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.
சிங்கங்களின் வாழ்விடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களாலும் அவற்றிற்கு முறையான பாதுகாப்பை வழங்க முடியும். சுற்றுச்சூழல் அமைப்பில் சிங்கங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை இவர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலமாக, இவர்களும் சிங்கங்களை வேட்டையாட மாட்டார்கள். அதேநேரம் மற்றவர்களையும் வேட்டையாட விட மாட்டார்கள்.
சிங்கங்கள் பெரும்பாலும் அவற்றின் வாழ்விடங்களை விட்டு வெளியேறும்போதுதான் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. எனவே, அவற்றின் வாழ்விடங்களை முறையாகப் பாதுகாப்பதன் மூலமாகவும் சிங்க வேட்டையை ஓரளவு தடுக்க முடியும். இதற்காக, சிங்கங்கள் தடையின்றி செழித்து வளரக்கூடிய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தேசியப் பூங்காக்களை அரசாங்கமே நிறுவ வேண்டியது அவசியம்.
சிங்க வேட்டையைத் தடுப்பதற்கு மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிர்வகிக்க வேண்டும். இத்தகைய திட்டங்களுக்கு போதுமான நிதி மற்றும் வளங்கள் ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். அரசோடு சேர்ந்து மக்களும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே சிங்க வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.