

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். முன்னாள் முதல்வரையே தோற்கடித்த வி.எஸ்.பாபுவுக்கு தவெக நிர்வாகிகள் மத்தியில் மதிப்பு கூடியது.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதி முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் மு.க.ஸ்டாலின். இந்த வழக்கின் தீர்ப்பை சற்று முன் வெளியிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். விவிபேட்களை சரிபார்க்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு குறித்த வழக்கை விசாரித்து வந்தது.
சட்டமன்ற தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடுகளை முழுமையாக மறுசரிபார்ப்பு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனுவை ஏற்று, 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில் கொளத்தூரில் பதிவான விவி பேட் சீட்டுகளை 100% முழுமையாக மறு சரிபார்ப்பு செய்ய வேண்டும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொளத்தூர் தொகுதி வழக்கில் எப்படியும் சாதகமான தீர்ப்பு வரும் எதிர்பார்க்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த வழக்கு தள்ளுபடி ஆனது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திமுக தாக்கல் செய்த இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பிலும், தேர்தல் ஆணையம் மற்றும் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்த நிலையில், செபடம்பர் 3-ம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
இவிஎம் இயந்திரங்களை சோதனை செய்ததன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல அன தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. பரபரப்புக்கு மத்தியில் இன்று வெளியான தீர்ப்பில், திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றிக்கு இனி பிரச்சினை இருக்காது எனத் தெரிகிறது. இந்தத் தீர்ப்பை தவெக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் கொண்டாடி வருகின்றர்.
கொளத்தூர் தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், திமுக தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.