
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் முதலீடு மீதான விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்துள்ளது. பொதுமக்கள் பலரும் அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் எதிர்காலத் தேவைக்காக இன்றே முதலீடு செய்து வருகின்றனர். சமீப காலமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறைந்த காலத்தில் அதிக இலாபம் தரக் கூடிய காரணத்தால், ரிஸ்க் எடுக்கத் துணிந்தவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும் சாதாரண மக்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எட்டாக்கனியாகவே இருந்தது. இந்நிலையில் இதற்குத் தீர்வு காணும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் எஸ்ஐபி திட்டம்.
எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய பல நிதி நிறுவனங்கள் குறைந்தபட்ச முதலீட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அவ்வகையில் தற்போது என்ரிச் மனி நிறுவனம் வெறும் 10 ரூபாயில் எஸ்ஐபி முதலீடு செய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
10 ரூபாய் தான் என்றால் பலருக்கும் முதலீடு செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும். வீண் செலவுகளைக் குறைத்து முதலீட்டில் கவனம் செலுத்தினால், நம்மால் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும். இத்திட்டத்தில் முதலீட்டுத் தொகை மிகவும் குறைவு என்பதால், இலாபமும் குறைவாகத் தான் இருக்கும். இருப்பினும் பொதுமக்களிடையே முதலீட்டு ஆர்வத்தை இந்தத் திட்டம் அதிகப்படுத்தும்.
சென்னையில் தனது கார்ப்பரேட் அலுவலகத்தை நிறுவியுள்ள என்ரிச் மனி நிறுவனம், சிறுபான்மையின மக்களுக்கும் முதலீட்டு வாய்ப்பை வழங்கும் வகையில் 10 ரூபாய்க்கு எஸ்ஐபி திட்டத்தை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. குறைந்த முதலீடு என்பதால் தினசரி ஒரு சிறு தொகையை சேமித்தாலே எஸ்பிஐ முதலீட்டை மேற்கொள்ள முடியும்.
இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஓராண்டுக்குள் தமிழ்நாட்டின் சிறிய நகரங்களைச் சேர்ந்த 10 இலட்சம் பேரை முதலீடு செய்ய வைப்பதே அங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம். இதற்காக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் முதலீட்டு ஆர்வத்தை வெளிக்கொண்டு வர வெறும் 10 ரூபாயில் எஸ்ஐபி திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். இந்தத் திட்டத்தில் கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் கிராம மக்கள் உட்பட அனைவரும் சேரலாம். ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் மூலம் எஸ்ஐபி முதலீட்டைத் தொடங்கலாம். 100% இந்தத் திட்டம் டிஜிட்டல் முறையில் மட்டுமே செயல்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.