

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஎஸ் பாபு 82,997 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் 74,202 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்றும் மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் தி.மு.க சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கின. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் முன்னிலையில் 3 நாட்கள் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆய்வு, சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில், எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
சரிபார்ப்பு பணியின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் முழுமையாக விளக்கிக் காண்பிக்கப்பட்டன. விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்கள் உடனுக்குடன் அளிக்கப்பட்டன.
ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சரிபார்ப்பு நடைமுறைகளின்படி முறையாக செயல்படுகின்றன என்று பெல் நிறுவன பொறியாளர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழின் நகல் விண்ணப்பதாரர் வேட்பாளருக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், மு.க.ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரிபார்ப்பின்போது சில இயந்திரங்கள் திடீரென செயலிழந்ததாகவும், ஆறு வாக்குச்சாவடிகளில் இவிஎம் மற்றும் விவிபேட் பதிவுகளை ஒப்பிட்டபோது முரண்பாடுகள் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களையும் முழுமையாக சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை, விவிபேட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று அறிவிக்கக் கோரி கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி, தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தவை அல்ல. எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், இந்த வழக்கை ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டாலினின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கில், 2025-ம்ஆண்டு அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, (நீதிமன்றத் தீர்ப்பு) வழக்கை திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதியளித்தனர்.