

மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ,உள்ளூர் மக்களை பீதி அடையச் செய்துள்ளது. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பயந்து போன மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்து நின்றனர். இந்த நிலநடுக்கம் ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) கொடுத்த தகவல் படி , வங்கதேசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இந்தியாவின் கொல்கத்தாவில் உணரப்பட்டப்ப இந்த நிலநடுக்கம் , அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே , இன்று காலையில் தொடங்கியுள்ளது. சற்று அபாயம் மிகுந்த 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்க தேசத்தில் உள்ள நர்சிங்டிக்கு தென்மேற்கே 13 கி.மீ தொலைவில், சரியாக காலை 10.08 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு தொடங்கியதால் , நில அதிர்வு அலைகள் குறைந்த தூரம் மட்டும் பயணித்து வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் , இந்தியாவின் மே.வங்க மாநிலம் மட்டுமல்லாமல் , அதன் அண்டை மாநிலங்களான வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக கொல்கத்தா, கவஹாத்தி, அகர்தலா மற்றும் ஷில்லாங் போன்ற நகரங்களில் லேசான அதிர்வுகள் பதிவாகின.
இன்று காலை 10:10 மணியளவில் இந்த அதிர்வை கொல்கத்தா மக்கள் உணர்ந்ததாகவும், அதனால் கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பாளர்கள் பலரும் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் மட்டுமே நீடித்தாலும் , பீதி மற்றும் பயம் காரணமாக வெளியேறிய மக்கள் , வீட்டுக்குள் செல்ல பயந்து அங்கேயே நின்றுள்ளனர். நிலநடுக்க காட்சிகள் சில படம்பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் மிகவும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில், நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மற்றும் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் பல அலுவலகங்கள் உடனடியான மூடப்பட்டன. உள்ளூர் மக்கள் பயத்துடன் கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் ஏராளமாக திரண்டதால் , அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்து நீண்ட நேரம் வாகனங்கள் கடக்க முடியாமல் நிற்கின்றன.
வங்கதேசம் இந்திய, யூரேசிய மற்றும் பர்மா ஆகிய மூன்று டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தியத் தட்டு ஆண்டுக்கு சுமார் 6 செ.மீ. வேகத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.கூடவே யூரேசியத் தட்டும் ஆண்டுக்கு 2 செ.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதே இந்த நில அதிர்வுகளுக்கு முக்கியக் காரணம். இது போன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள், நிலத்தின் மேற்பரப்பிற்கு அருகிலேயே ஏற்படுவதால், தொலைதூரப் பகுதிகளிலும் வலுவான அதிர்வை உருவாக்க முடியும் என புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த புவியியல் நிலை காரணமாக, வங்கதேசம் பூகம்ப பாதிப்பு மண்டலமாக உள்ளது. உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் டாக்காவும் இருப்பதால் , உலகளவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய 20 நகரங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இன்றைய நிலநடுக்கத்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் , மே.வங்கம் மற்றும் வங்கதேசத்தில் எந்த உயிரிழப்பும் , பெரிய அளவில் சேதமும் ஏற்படவில்லை.