
கொல்கத்தா இஸ்கான் அமைப்புக்கு சொந்தமான ஜெகந்நாதர் கோயிலில் 50 வருடங்களுக்கு மேலாக தேர் திருவிழா நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. கொல்கொத்தாவில் உள்ள பிரம்மாண்டமான ஜெகந்நாதரின் தேருக்கு பொருத்தமான சக்கரத்தை (டயர்) நிர்வாகத்தினர் 20 ஆண்டு காலமாக தேடிக் கொண்டு வந்தனர் . நீண்ட காலத்திற்கு பிறகு பொருத்தமான டயரை அவர்கள் கண்டுபிடித்து விட்டனர் .
கொல்கத்தா ஜெகந்நாதர் தேர் முதலில் சிறிய வடிவில் 1972 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் தொடங்கியது. கொல்கத்தா நகர வீதிகளில் சிறிய தேர், ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்திரை ஆகிய கடவுளர்களின் சிலைகளை தாங்கி ஊர்வலமாக சென்று கொண்டிருந்தது. பிறகு மக்களின் ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாக தேரின் உயரமும் பிரம்மாண்டமும் அதிகரித்தது.
1977 ஆம் ஆண்டு இஸ்கான் உறுப்பினர் ஒருவரின் மிகப்பெரிய நன்கொடையில் பிரம்மாண்டமான தேர் ஒன்று கட்டப்பட்டது. அப்போது போயிங் 747 ஜம்போ ஜெட் விமானத்தில் பயன்படுத்திய டயர்களை பெற்று, தேர்களில் பொருத்தி ரத ஊர்வலம் நடத்தப்பட்டது.
பிற்காலத்தில் தேரின் உயரத்தை அதிகரித்ததாலும், அதனால் எடையும் அதிகரித்ததால் டயர்கள் படிப்படியாக தேய்மானம் அடைந்தன. அவை ஆண்டுதோறும் ஒட்டுப்போட்டு பழுதுபார்க்கப்பட்டன.
2005 ஆம் ஆண்டில் டயர்களின் மோசமான நிலையைக் கவனித்த இஸ்கான் கொல்கத்தா துணைத் தலைவர் தாஸ், போயிங் விமான டயர்களுக்கு மாற்று தேவை என்பதை உணர்ந்தார். ஆனாலும், டயர்களை மாற்றுவது அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இதில் உள்ள சவால் தேரின் எடைக்கு தகுந்த டயர்களை தேர்தெடுப்பது. பெரிய தேரின் எடையை கண்டறிவது சுலபமான காரியம் அல்ல. இறுதியில் தேரின் எடை ஒன்பது டன்னாக மதிப்பிடப்பட்டது. ஊர்வலத்தின் போது அதில் சவாரி செய்யும் பக்தர்களின் எடையைக் கருத்தில் கொண்டு, டயர்கள் சுமார் 16 டன்களைக் தாங்கி நகர வேண்டியிருந்தது.
புதிய டயர்களுக்கான ஆய்வில் தாஸ் மற்றும் அவரது குழுவினர் சுகோய் போர் விமானங்களுக்காக வடிவமைக்கப்பட்ட டயர்களைப் பயன்படுத்த முடிவு செய்தனர். இந்த டயர்கள் கனரக பொருட்களை தாங்கும் தன்மைக்கு பெயர் பெற்றவை. இந்த டயர்களை பெற 2018 இல் MRF நிறுவனத்தை தொடர்பு கொண்டனர்.
ஆயினும் அந்த நிறுவனம் டிசம்பர் 2024 ஆம் ஆண்டு தான் இஸ்கான் கொல்கத்தா அமைப்பை தொடர்பு கொண்டது. தேரை ஆய்வு செய்ய குழு ஒன்றையும் அனுப்பியது. மேலும் விவாதங்கள் மற்றும் விலை தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேருக்கு டயர்கள் வழங்கப்பட்டன.
இந்த டயர்கள் இந்திய விமானப் படையின் சுகோய் ரக போர் விமானங்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டவை. இவை இனி கொல்கத்தா ஜெகந்நாதரின் தேரையும் தாங்கும் வாய்ப்பை பெறுகின்றன. தேரில் உள்ள நான்கு டயர்களுக்கான மொத்த விலை 1.80 லட்ச ரூபாய். புதிய டயர்கள் பொருத்தப்பட்டு 24 கிலோமீட்டர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. சோதனையில் தேர் நன்றாக ஓடி தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா ஜெகந்நாதரின் தேரோட்டம் இன்னும் சில வாரங்கள் கழித்து தொடங்கும். இந்த முறை ஜெகந்நாதரின் தேர் போர் விமானத்தின் டயர்களுடன் சிறப்பாக ஊரை வலம் வரும்.