பக்தர்கள் கவனத்திற்கு..!! இன்று முதல் மருதமலை கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை..!

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் புதிய கட்டுப்பாடு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
kovai marudhamalai temple
kovai marudhamalai temple
Published on

கோயம்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் ஏழாவது படைவீடு என்று போற்றப்படும் மிகவும் புகழ்பெற்ற மலைக்கோவிலாகும். 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் தண்டாயுதபாணியை முதன்மைக் கடவுளாகக் கொண்டு, 'மருதாசலமூர்த்தி' என்றும் வணங்கப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. இங்குள்ள மூலவர் சிலை தானாகத் தோன்றியதாக (சுயம்பு) நம்பப்படுகிறது. இந்த கோவில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

குறிப்பாக வார இறுதி நாட்களிலும்,விசேஷ நாட்களில் மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமாக இருக்கும். பக்தர்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களிலும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பக்தர்களுக்கு கட்டுப்பாடு! திருச்செந்தூர் முருகன் கோவிலில் இதை செய்தால் கடும் நடவடிக்கை..!
kovai marudhamalai temple

இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் எடுக்கவும் தடைவிதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்ச் 10-ந் தேதி(இன்று) முதல் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்பட அனைத்து சுவாமி சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் செல்போன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே பக்தர்கள் அனைவரும் கோவில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் நுழைவதற்கு முன்பு தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது’.

மேலும் கோவிலில் வயதான பக்தர்களுக்காக லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் அதில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்கள் லிப்ட்டில் பயணிக்க கடந்த 8-ம்தேதி முதல் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி லிப்ட்டில் பயணிக்க பக்தர் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் செல்போன், கேமரா பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்கவும், ட்ரோன்களை பறக்க விடவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மருதமலை முருகன் கோவிலிலும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இனி ஆன்லைனில் மகாபிரசாதம் இல்லை! பூரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் அதிரடி!
kovai marudhamalai temple

அதேபோல் திருச்செந்தூர் கோவிலில் இந்த தடை உத்தரவை மீறி யாராவது செல்போன், வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுத்தால் செல்போன் மற்றும் கேமரா பறிமுதல் செய்யப்பட்டு ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com