

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் திருத்தலம், கடற்கரையில் அமைந்த ஒரே முருகன் திருக்கோவிலாகும்.
இது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 7-ம்தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூர் முருகனை காண, நாள்தோறும் உள்ளூரில் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, வார இறுதி நாட்கள், செவ்வாய்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ தினங்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதேபோல் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி, அதிகாலையில் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த கோவில் அமைந்துள்ள கடற்கரையை ஒட்டிய பகுதி, பாரம்பரிய சடங்குகள் செய்வதற்கும் புனிதம் நிறைந்ததாகவும் பக்தர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த கோவில் வளாகத்தில் நடந்த ஒரு சம்பவம் பக்தர்கள் இடையே சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலான நிலையில், பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
அந்த பெண்ணின் செயல் கோவிலின் புனிதத்தை களங்கப்படுத்தி விட்டதாகவும், மத உணர்வை புண்படுத்தி விட்டதாகவும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் கோவில் மட்டுமில்லாமல், பல்வேறு ஆன்மீக தலங்களிலும், இதுபோன்று கோவிலின் புனிதத்தை கொடுக்கும் வகையில் பலரும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் இதுபோன்ற கோவில் புனிதத்தை கொடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கோவில் வளாகத்தில் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது என்றும், கோவில் வளாகத்திற்குள் சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதற்கும், அத்தகைய வீடியோக்களை பதிவு செய்வதற்கும் கடுமையான தடை விதித்துள்ளது.
அந்த வகையில் பக்தர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தும் வகையில் கோவிலின் உள்ளே 15 இடங்களில் அதிகாரிகள் எச்சரிக்கை பலகைகளை நிறுவியுள்ளனர். அந்த பலகையில், ‘கோவிலுக்குள் வீடியோக்களை பதிவு செய்வதும், சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.