

டெல்லியில் அடல் கேன்டீன் ( Atal Canteen) எனும் ரூ. 5 க்கு சத்தான மதிய மற்றும் இரவு உணவு வழங்கும் மலிவு விலை கேன்டீன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101ம் பிறந்தநாளான நேற்று முன்தினம் (25 டிசம்பர் 2025) டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில் துவங்கப்பட்டது.
இந்த புதிய அரசாங்கத் திட்டம் தொழிலாளர்கள், தினக்கூலியாளர்கள், குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள் மற்றும் வறிய மக்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் கௌரவமான உணவு சேவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் 100 இடங்களில் Atal Canteen கள் அமைக்கப்பட்டு அதில் 45 கேன்டீன்கள் தற்போது திறக்கப்பட்டு செயல்படுவதாகவும் மற்றவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
பசியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் உணவு வீணாகாமல் இருப்பதற்கும், திறமையான மேலாண்மைக்குமான செயல்முறைகளும் டிஜிட்டல் டோக்கன் மற்றும் கண்காணிப்புகளும் உள்ளது சிறப்பு.
ஒவ்வொரு உணவகத்திலும் ஒரே சமயத்தில் சுமார் 500 பேர் வரை உணவு பெறும் வகையில் காலை 11:00 – மாலை 4:00 மதிய உணவும் மாலை 6:30 – இரவு 9:30 வரை இரவு உணவும் பெறலாம்.
அரசு மூலம் சலுகை விலையில் முக்கிய உணவுப் பொருட்களை வறுமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் அமைப்பாக பப்ளிக் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் (Public Distribution System – PDS) தான் அதாவது “அரசு பொதுப் பகிர்வு நெறிமுறை” சர்வதேச இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே (World War II) உணவு பற்றாக்குறையை சமாளிக்க முதலில் நாட்டு அளவில் தொடங்கப்பட்டதாகவும்
பின்னர் சுதந்திரத்துக்குப் பிறகும் நீண்ட காலமாக இந்திய அரசால் இந்த அமைப்பு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகவும் குறிப்புகள் உண்டு.
ஆனால் இந்த மலிவு விலை உணவகங்கள் வரிசையில் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக நமது தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு
அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவால் துவங்கப்பட்டு தற்போதும் தொடர்ந்து செயல்படும் "அம்மா உணவகம்" தான் என்று கூறப்படுகிறது.
இட்லி ரூ. 1 , சாம்பார் சாதம் ரூ. 5, தயிர் சாதம் ரூ- 3 என அரசு மானியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட விலைகளுடன் அம்மா உணவகம் என்றால் “மலிவு விலை + மரியாதையுடன் உணவு” என்ற தமிழ்நாட்டின் அடையாளத் திட்டமாக இருக்கிறது.
இந்தியாவிலேயே மிகச் சிறந்த மலிவு உணவுத் திட்டங்களில் ஒன்று என பல மாநிலங்கள் மற்றும் நாடுகள் கூட இந்த மாடலை ஆய்வு செய்துள்ளதை குறிப்பிட வேண்டும். பெருந்தொற்று காலத்தில் ஊரே முடங்கிய போது பசித்த வறியவர்களுக்கு உணவு அளித்த பெருமை இத்திட்டத்தின் சிறப்பு.
இதன் வழியே திட்டமிடப்பட்ட 5 ரூபாய் உணவகம் டெல்லி அரசின் ஒரு பெரிய நலத்திட்ட முயற்சி என்றாலும் இதில் ஊட்டச்சத்து அடங்கிய பருப்பு (dal), சாதம் (rice), சப்பாத்தி, காய்கறி மற்றும் ஊறுகாய் போன்றவை அடங்கிய முழு (thali) உணவாகும் என்பதால் டெல்லி மக்களிடையே அம்மா உணவகம் போல நீடித்த வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.