
சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்ட நிலையில், பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திற்கு 2024 ஜனவரி முதல் மாற்றப்பட்டது. இதனால் வெளி மாவட்டங்கள் செல்லும் பயணிகள் கிளாம்பாக்கத்திற்குச் சென்று பேருந்து ஏறிச் செல்கின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகிதம் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து பத்து சதவிகித பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல பல இடங்களில் பேருந்து முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
வட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக சென்னை பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கத்தில் ரூ.414 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டமைப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்லும்
புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து , வேலூர் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , ஒசூர் , திருப்பதி , பெங்களூரு , திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
என்னென்ன வசதிகள்
1800 இருசக்கர வாகனங்கள், 250 கார்கள் நிறுத்தும் வசதியுடன், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறையுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த புதிய பேருந்து நிலையத்திலிருந்து , கிளாம்பாக்கம் , கோயம்பேடு , மாதவரம் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் , 100 மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பூந்தமல்லியில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகள் , குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் , தி.நகர் , பிராட்வே , திருவொற்றியூர் , எண்ணூர் , தாம்பரம் , கூடுவாஞ்சேரி, அடையாறு , அண்ணாசதுக்கம் , கிண்டி, கோவளம் உள்ளிட்ட கூடுதல் வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்