வெள்ளித்திரையைச் சின்னத் திரைக்குள் கொண்டு வந்த ஊடகவியலார், பின்னர் சின்னத்திரைக்கென்றே சீரியல்களைத் தயாரிக்க ஆரம்பித்து, அவைகளையும் மெகா சீரியல்களாக்கி மகிழ்கிறார்கள். மெகா சீரியல்களால் ரசிகர்கள் திருப்தியடைகிறார்களா என்று கேட்டால் முழுதாக ‘ஆம்’ என்றோ, மொத்தமாக ’இல்லை’ என்றோ சொல்லிவிட முடியாது. கலவையான விமர்சனந்தான்!’. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு!’ என்பது உயிர்காக்கும் அமிர்தத்திற்கு மட்டுமல்ல, அனைத்துக்குமே பொருந்தும்!
இசை, நடன விமர்சகர் சுப்புடு ஐயா உயிருடன் இருந்தவரை, மார்கழி மாத இசை, நடனக் கச்சேரிகள் நடைபெறுகையில், அவரை முன் வரிசையில் பார்த்து விட்டால், மேடையில் பாடும், ஆடும் ஜாம்பவான்களே கொஞ்சம் மிரண்டுதான் போவார்களாம். அந்த அளவுக்குத் துல்லியமான விமர்சனத்தை, பாரபட்சமின்றி எழுதுவதில் அவர் வல்லவராம். விஷயமறிந்தோரின் விமர்சனங்கள் கலை வளர்ச்சிக்கு வித்திடும்!
சின்னத்திரை, வாழ்வியலின் அனைத்து அம்சங்களையும் கவரும் நிகழ்ச்சிகளைக் கொண்டு இயங்கி வருகிறதென்பது உண்மையே! செய்திகள், பேட்டிகள், சினிமாக்கள், சீரியல்கள், சமையல், உடற்பயிற்சி என்று எல்லாமே அதில் அடக்கம். ஆனால் ‘வளர்ந்து வரும் ஒரு நாட்டில், இவ்வளவு நேர நிகழ்ச்சிகள் தேவையா?’ என்ற ஆதங்கமும் பலருக்கு உண்டு. நிகழ்ச்சி விரும்பிகள், ‘உலகம் முழுவதும் இப்படித்தானே இருக்கிறது!’ என்று வாதிடுவார்கள்.
ஆனால், உலக நாடுகளின் நடைமுறை வேறு; நமது நாட்டின் அணுகுமுறை வேறு. அங்கெல்லாம் அலுவலகத்திலோ அல்லது அலுவலகம் செல்லும் பாதைகளிலோ திரைப்பட ஷூட்டிங் நடைபெற்றால், யாரும் நின்று கூடப் பார்க்க மாட்டார்களாம். ’அவர்கள், அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள்; நாங்கள் எங்கள் தொழிலைக் கவனிக்க வேண்டும். தியேட்டர்களுக்குத்
திரைப்படங்கள் வருகையில், ஓய்வாகச் சென்று பாரத்துக் கொள்வோம்!’ என்பார்களாம். இங்கு சின்னத்திரை சீரியலுக்கு வெளிப்புறத்தில் படப்பிடிப்பு நடந்தால்கூட அலுவலகங்களில், பள்ளிகளில், தொழிற்சாலைகளில் வருகைப் பதிவு குறைந்து, படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் கூட்டம் கூடி, போலீஸ் பாதுகாப்புப் போடும்படி ஆகி விடுகிறது.
மெகா சீரியல்களில் பெரும்பாலானவை, பெண்கள் பெயரையே தலைப்பாகக் கொண்டுள்ளன. அவர்களைச் சுற்றியே கதையமைப்பும் நகர்கிறது. எல்லாப் புத்திசாலித் தனமான முடிவுகளையும் அவர்களே எடுக்கிறார்கள். எல்லாம் சரிதான்!ஆனால் தங்கள் மருமகள்களுக்கு எதிராக மாமியார்கள் போடும் ஆட்டம், மிக அதிகப்படியாகவே சித்தரிக்கப்படுகிறது. மாமியார்களும் பெண்கள்தானே! சீரியல்கள் பெண்களைப் பெருமைப் படுத்துகின்றனவா? சிறுமைப் படுத்துகின்றனவா? கதாசிரியர்களும், இயக்குனர்களும் சிந்திக்க வேண்டும். வில்லன்களாகக் கூடவா ஆண்களைக் காட்டக்கூடாது? சீரியல்களில் இவ்வளவு பெண்ணாதிக்கம் தேவையா?
சீரியல்களின் பெயரைச் சொல்லாமல் அபத்தங்கள் சிலவற்றை மட்டும் சொல்கிறேன். உங்களுக்கே எதுவென்று புரியும்.
திருமணமான பின்னுங்கூட வேறு பெண்ணுடன் தன் மகனைச் சேர்த்து வைக்கத் துடிக்கும் தாய்! அடியாட்களை வைத்துத் தீர்த்துக்கட்ட முயன்று தோற்ற பிறகு, அரசாங்க அதிகாரியான காவல்துறை இன்ஸ்பெக்டர் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறாளாம். அதுவும் எப்படி? குடும்பத்துக்காக வெளிநாட்டில் தனிமையில் தங்கி சிரமப்பட்டுச் சம்பாதித்து அனுப்பும் கணவனுக்குத் துரோகம் இழைக்கும் மருமகள், மாமியாரிடம் காதலனுடன் சிக்க, மாமியாரையே கொன்று விட்டு அந்தப்பழியை வீட்டுப் பணி செய்யும் நாயகி மேல் போடுகிறாளாம்.
இதனை அறிந்த பணக்காரத் திமிர் பிடித்த கயலின் மாமியார், காவல்துறை மூலம் மருமகளைப் பழி வாங்கத் திட்டமிட்டு, இன்ஸ்பெக்டருக்கு லஞ்சமாக, வாயைப் பிளக்காதீர்கள்! ஒரு கோடி கொடுக்கிறாள். அந்தப் பேராசை 'இன்ஸோ', வில்லா வாங்க மேலும் 25 லட்சம் கேட்க, அதனையும் கொடுக்கிறாள். அப்புறம் வருங்காலப் பணக்கார மருமகளின் பேச்சைக்கேட்டு, மருமகளைக் கொலை செய்யுமாறும், அதற்கு மேலும் 4 கோடி தருவதாகவும் பேரம் பேசி, 'இன்'சைப் படியவும் வைக்கிறாள்.
மற்றொரு சீரியல் மாமியார், தன் நாத்தனாரின் மகளான மருமகளைப் பழி வாங்க, கணவனையும் இளைய மகனையுமே எதிரியாகப் பாவித்து ஏகப்பட்ட தொல்லை கொடுக்கிறாள்.
இன்னொன்றில் மகன் மீது உள்ள வெறுப்பை, ஏழையான, குணத்தில் குன்றான மருமகள் மீது பலவிதத்திலும் உமிழ்கிறாள் இன்டஸ்ட்ரியலிஸ்டான மாமியார். மகள்களின் துணையோடு டைனிங் டேபிளில் சாம்பாரை ஊற்றுவதெல்லாம் வேடிக்கையாகவே இருக்கிறது.
நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் இரவு சீரியலில், ஈகோவுக்காகத் தப்புகளை அடுக்கடுக்காய் செய்யும் மகன்களுக்குத் துணை போய், நல்ல மருமகள்களை வருத்தெடுக்கிறார் ஒரு மாமியார். இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஏற்கெனவே நமது காவல்துறை மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாத பட்சத்தில், ஒரு சில சீரியல்கள் தவிர, மற்ற அனைத்திலுமே காவல் துறையினரை பணத்திற்காகச் சட்டத்தையும், நேர்மையையும் மீறுபவர்களாகவே காட்டுவது கண்டிக்கத் தக்கதல்லவா?அதிலும் வில்லிகள் எது சொன்னாலும் அவர்கள் உயரதிகாரிகளாக வில்லிகளையே நினைத்துச் செயல் புரிவதாகக் காட்டுவதில் துளியளவும் நியாயமில்லையே!
குறை காண்பது நமது நோக்கமல்ல. இருப்பதைச் செம்மையாக்கலாமே என்பதே நமது அவா! ஏனெனில்,வெள்ளித் திரையும், சின்னத்திரையும் மிகச் சிறந்த வழிகாட்டிகள். மக்கள் மனதில் மாற்றத்தைத் தோற்றுவிப்பதில் அவற்றின் பங்கு மகத்தானது! அவற்றை நேர்மறை விஷயங்களுக்குப் பயன்படுத்தினால் சமுதாயம் பயன் பெறும். உரியவர்கள் செய்ய வேண்டும்.