குவைத்தில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்திற்கு மனித வெடிகுண்டு (human bomb) மிரட்டல் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு உண்டாயிற்று. குவைத்தில் இருந்து தெலுங்கானா நோக்கி புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் செய்தி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஏர்பஸ் A321-251NX என்ற விமானம் அதிகாலை 1:56 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விமானத்தில் மனித வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு எச்சரிக்கை வந்துள்ளது. அதைத் தொடர்ந்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் காலை 8.10 மணிக்கு தரை இறங்கிய விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு(Isolation Bay) கொண்டு சென்று பரிசோதனை நடந்து வருகிறது. இது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த சோதனையில் வெடிகுண்டோ அல்லது வேறு எந்த சந்தேகத்திற்கு இடமான பொருளோ கண்டறியப்படவில்லை. இந்த மிரட்டல் ஒரு பொய்யான அச்சுறுத்தல் என்று உறுதிப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு விமானம் மீண்டும் தனது பயணத்தை தொடர்வதற்கு அனுமதிக்கப்படும் என்றும், அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியவருடைய பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.
இதேபோன்று சென்ற நவம்பர் 23 அன்று ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு பஹ்ரைனில் இருந்து வரும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதைத் தொடர்ந்து மும்பைக்கு திருப்பி விடப்பட்ட விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பொழுது சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்று தெரிவித்தனர்.