.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
காலை துவங்கிய விசாரணையில் சுமார் ஒரு மணி நேரம் சென்சார் போர்டு சார்பில் தங்கள் நியாயங்களை தலைமை நீதிபதிகள் முன் எடுத்து வைத்த நிலையில் மதிய உணவு இடைவேளைக்குப் பின் தற்போது தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரோடக்ஷன் தரப்பு தனது வாதங்களை முன்வைத்தது. மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் உயர் நீதிமன்றத்தில் வாதத்தை தொடர்கிறார்.
வெளிப்படைத்தன்மை இல்லை: தணிக்கைச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. டிசம்பர் 29-க்குப் பிறகு ஆன்லைனில் எந்தத் தகவலும் பதிவேற்றப்படவில்லை.
விதிமீறல்: தணிக்கைக் குழுவின் ஆட்சேபனைப்படி மத நம்பிக்கைகள் குறித்த காட்சிகளை நீக்கி டிசம்பர் 25-லேயே அனுப்பிவிட்டோம். ஆனால், மறுதணிக்கை செய்யப்போவதாகத் தகவல் மட்டுமே கொடுத்தனர்; அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு நகலை வழங்கவில்லை.
புகார் விவகாரம்: படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ஒருமனதாகச் சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்தனர். ஆனால், படத்தைப் பார்த்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு உறுப்பினர் மட்டும் ராணுவத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகப் புகார் அளித்தது விதிகளுக்கு எதிரானது.
மீண்டும் புகார்: ஏற்கனவே தணிக்கை குழுவின் அறிவுறுத்தலின்படி நீக்கப்பட்ட 14 காட்சிகள் குறித்து மீண்டும் ஒரு உறுப்பினர் புகார் அளித்திருப்பது எப்படி நியாயமாகும்?
மன உளைச்சல்: திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாததால் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரும் நிதி இழப்பும், தேவையற்ற மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது.
அமேசான் எச்சரிக்கை: இப்படத்தின் ஓடிடி (OTT) உரிமையைப் பெற்றுள்ள அமேசான் நிறுவனம், ரிலீஸ் தேதியை உடனடியாகத் தெரிவிக்கக் கோரி தங்களை எச்சரித்துள்ளதாகவும், தாமதமாகும் பட்சத்தில் பெரும் தொகையை நஷ்டஈடாகக் கேட்க வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பு வேதனையுடன் தெரிவித்தது.
டிசம்பர் 18ஆம் தேதி சென்சார் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோம். முடிவு செய்யாவிட்டால் அது தொடர்பான தகவலை மனுதாரர்களுக்கு சென்சார் போர்டு தெரிவித்திருக்க வேண்டும். சென்சார் போர்டு ஆட்சேபணை செய்த காட்சிகளை நீக்கி டிசம்பர் 25ஆம் தேதி தணிக்கை குழுவுக்கு அனுப்பி விட்டோம் டிசம்பர் 29ஆம் தேதிக்கு பிறகு சென்சார் போர்டு தகவல்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படவில்லை. சென்சார் போர்டு தகவல்களை மறைத்தது.மத நம்பிக்கைகள் குறித்து காட்சிகளை நீக்க சொன்ன தணிக்கை குழுவின் ஆட்சேபனைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. மறுத்தணிக்கை என தகவல் தெரிவிக்கப்பட்டதால் மட்டுமே நீதிமன்றம் சென்றோம். விதிகளின்படி இரண்டு நாளில் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சென்சார் போர்டு முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் விதிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது விதிகளை ஆய்வு செய்த அடிப்படையில் தான் தனி நீதிபதி தீர்ப்பளித்தார் எனவும் படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுதணிக்கை எனும் தகவலை மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்துள்ளார் என்ற தயாரிப்பாளர் தரப்பு வாதம் மீது மறுதணிக்கை எனும் தகவல் மட்டுமே ரத்து என்றால் ஜனநாயகனுக்கு சான்றிதழ் வழங்குமாறு எப்படி கூற முடியும்? என தலைமை நீதிபதி குறுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வழக்கில் கவனமாக கால நேரம் எடுத்துக் கொண்டு தனி நீதிபதி விசாரித்து இருக்கலாம். விதிகளின்படி போதுமான கால அவகாசத்தை சென்சார் போர்டு தரப்பிற்கு வழங்கி இருக்க வேண்டும். சென்சார் போர்டுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்திருந்தால் கூட தனி நீதிபதி விசாரணை கேள்விக்குள்ளாகி இருக்காது எனவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
படத்தைப் பார்த்துவிட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு புகார் அளிக்கலாமா? படத்தை பார்வையிட்ட குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க பரிந்துரைத்தனர். ஆனால் ஜனநாயகனுக்கு எதிராக தணிக்கை வாரிய தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது .இந்த நிலையில் யார் புகார் அளித்தார் ?படத்தை பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும் என்பதுதான் விதி. மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் மற்றும் ராணுவத்தை தவறான முறையில் சித்தரித்துள்ளனர் என்றெல்லாம் தணிக்கை குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் புகார் அளித்துள்ளது விதியை மீறிய செயல் என்று தயாரிப்பு நிறுவனம் வாதத்தை முன்வைத்துள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகார் யாரிடம் கிடைத்தது என்ற நீதிபதிகள் கேள்விக்கு மும்பையில் உள்ள சென்சார் போர்டு தலைவரிடம் புகார் கிடைத்ததாகவும் சென்சார் போர்டு பதில் அளித்துள்ளது. மேலும் தணிக்கை தொடர்பான அனைத்தும் இ- சினிபிரமான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது என சென்சார் போர்டு பதில் அளித்துள்ளது
தலைமை நீதிபதியின் அதிரடி கருத்துக்கள்: தயாரிப்புத் தரப்பின் வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, சில சட்டப்பூர்வ யதார்த்தங்களை மிகவும் கறாராகச் சுட்டிக்காட்டினார்:
அரிதான வழக்கு அல்ல: "இந்த வழக்கைச் சட்ட ரீதியாக 'அரிதிலும் அரிதான வழக்காக' (Rarest of Rare case) கருத முடியாது. எனவே, உங்களுக்கு மட்டும் எந்தவிதத் தனி விதிவிலக்கும் அளிக்க முடியாது," என்று நீதிபதி திட்டவட்டமாகக் கூறினார்.
அவசர உத்தரவு தவறு: ஒரே நாளில் அனைத்துத் தணிக்கை நடைமுறைகளையும் முடித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதி ஒரு நாளில் உத்தரவு பிறப்பித்தது முறையான சட்ட நடைமுறை அல்ல என்பதையும் நீதிபதிகள் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் தலைமை நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அல்லது அடுத்த சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனநாயகன் தொடர்பான வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது...
தீர்ப்பைப் பொறுத்தே படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.