இந்தியாவில் நெருங்கிய உறவினர்கள், அதாவது, கணவன்-மனைவி, சகோதரர்-சகோதரி, பெற்றோரின் உடன்பிறப்புகள், நேரடி வாரிசுகள் (பெற்றோர், குழந்தைகள்) ஆகியோரிடமிருந்து திருமணத்தின்போதோ அல்லது பரிசாகவோ பெறும் பணம், சொத்துகளுக்கு எவ்வித வரி வரம்பும் இன்றி முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல் உயில் (Will) அல்லது வாரிசு உரிமை (Inheritance) மூலமாகப் பெறப்படும் சொத்துகளுக்கு வரி இல்லை.
ஆனால் அதேசமயம், ஒரு சொத்து அன்பளிப்பாகவோ அல்லது பரிசாகவோ கிடைக்கும்போது, அது எப்போதும் வரி விலக்கிற்கு உட்பட்டது என்று கருதிவிட முடியாது.
வருமான வரி (ஐடி) துறையால் வழங்கப்பட்ட வரி அறிவிப்பை எதிர்த்து ஸ்ரீமதி அகர்வால் தாக்கல் செய்த வழக்கில் ITAT இந்த தீர்ப்பை வழங்கியது.
அதாவது அண்மையில், டெல்லியைச் சேர்ந்த ஸ்ரீமதி அகர்வால் என்பவருக்கும் அவரது மைத்துனர்(கணவரின் தம்பி) மூலம் ரூ.33 லட்சம் மதிப்புள்ள சொத்து பதிவு செய்யப்பட்ட தான பத்திரமாக கிடைத்தது.
ஆண்டு வருமானமாக ரூ.3.4 லட்சம் மட்டுமே காட்டியிருந்த ரத்னாவுக்கு, இந்த சொத்து பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
குடும்ப தீர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தான் சொத்தைப் பெற்றதால், அதன் மதிப்புக்கு வரி விதிக்கப்படாது என்று ஸ்ரீமதி அகர்வால் வாதிட்டார். இருப்பினும், வருமான வரி மதிப்பீட்டு அதிகாரி (AO) அவரது வாதத்தை நிராகரித்து, சொத்தின் மதிப்பை அவரது வருமானத்துடன் சேர்த்து, இந்த கூடுதல் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதாவது வருமான வரிச் சட்டம் பிரிவு 56-ன் கீழ், குறிப்பிட்ட உறவினர்கள் பட்டியலுக்குள் மைத்துனர் வராததால், அந்த தான பத்திரமாக கிடைத்த ரூ.33 லட்சத்தையும் அந்தப் பெண்ணின் வருமானமாகக் கருதி வரி விதிக்க அதிகாரி உத்தரவிட்டார்.
இந்த சொத்து முதலில் ஜூன் 12, 2017-ல் பதிவு செய்யப்பட்ட பரிசுப் பத்திரம் மூலம் ஒரு குடும்ப உறுப்பினரால் பெறப்பட்டது, பின்னர் இந்து குடும்ப தீர்வு ஒப்பந்தம் மூலம் ஸ்ரீமதி அகர்வாலின் வசம் வந்தது.
இந்தப் பரிவர்த்தனை அவருக்கும் அவரது மைத்துனர் திரு. ரவி அகர்வாலுக்கும் இடையே நடைபெற்றது. அவர் மறைந்த ஸ்ரீ ஏ.டி. அகர்வால், மறைந்த சஹ்தேவ் பிரசாத்தின் (அவரது மாமனார்) சகோதரர்.
ஸ்ரீ ஏ.டி. அகர்வால், தனது மரண படுக்கையில், தனது சொத்தில் பங்குகளை தனது மறைந்த சகோதரர் ஸ்ரீ சஹ்தேவ் பிரசாத்தின் குடும்பத்திற்கு பரிசளித்தார். அதனை தொடர்ந்து, கடந்த 36 ஆண்டுகளாக அமெரிக்காவில் குடியேறிய மருத்துவரும், வெளிநாடு வாழ் இந்தியருமான டாக்டர் ரவி அகர்வால், அதை நிர்வகித்து வந்தார். ரவி அகர்வால், தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், டெல்லியில் உள்ள சொத்தை தனது பெயரில் குடும்ப தீர்வு மூலம் பதிவு செய்தார். இவ்வாறு, ஒரு வகையில் இது ஒரு கூட்டு இந்து குடும்பச் சொத்தாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்.
மேலும் வருமான வரித்துறையை எதிர்த்து அந்த பெண் டெல்லி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) மேல்முறையீடு செய்யப்பட்டது.
விசாரணையில், குடும்ப தீர்வு குறித்த விவரிப்பு ஜோடிக்கப்பட்டதாகவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட பரிசுப் பத்திரத்தில் செல்லுபடியாகும் தன்மையைச் சேர்க்க வடிவமைக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) வரி செலுத்துவோருக்கு ஆதரவாக மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்து பிரிக்கப்படாத குடும்ப (HUF) உறுப்பினர்களிடமிருந்து பரிசீலனை இல்லாமல் ஒரு சொத்து பெறப்பட்டால், அது வருமானமாகக் கருதப்படாது என்று ஐடிஏடி டெல்லி கூறியது.
இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண்மணிக்கு வழங்கப்பட்ட சொத்து வெறும் பரிசாக மட்டும் வழங்கப்படவில்லை என்பதும், அது ஒரு இந்து கூட்டு குடும்பத்தின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப சமரச உடன்படிக்கையின் ஒரு பகுதி என்பதும் தெரியவந்தது.
அதாவது குடும்ப சமரச உடன்படிக்கை (Family Settlement Deed/Arrangement) என்பது குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சொத்து, வணிகம் அல்லது உறவுமுறை சார்ந்த கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளும் சட்டப்பூர்வமான ஒப்பந்தமாகும்.
இது நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாகச் சென்று, அனைவருக்கும் பொதுவான விதிகளின்படி சொத்துக்களைப் பிரித்துக்கொள்ளவோ அல்லது உரிமைகளை நிலைநாட்டவோ பயன்படுத்தப்படுகிறது. ஆனால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நிலவும் உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்காகச் செய்யப்படும் இத்தகைய ஏற்பாடுகள், சட்டப்படி சொத்து மாற்றமாக கருதப்படாது என்று தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் கீழ், முறையான கூட்டு குடும்பத்தின் பின்னணியில் மூலம் பெறப்படும் சொத்துக்கள் வருமானமாகத் கருதப்பட முடியாது என்று தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியது. மேலும் கூட்டு இந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்களாகவே கருதப்படுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியது.
மதிப்பீட்டு அதிகாரி இந்த குடும்ப சமரசத்தின் உண்மைத்தன்மையை மறுக்காத நிலையில், தொழில்நுட்ப காரணங்களை மட்டும் வைத்து தான பத்திரமாக கிடைத்த சொத்திற்கு வரி விதிக்க முடியாது என்று கூறியதுடன், ரூ.33 லட்சம் வருமானமாகச் சேர்க்கப்பட்டதை ரத்து செய்தது.
டெல்லி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பு வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கிய பாடத்தை உணர்த்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். அதாவது, ஒரு பரிமாற்றம் தான பத்திரம் என்ற பெயரில் இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மையும் நோக்கமுமே வரி விதிப்பைத் தீர்மானிக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது.
அதேசமயம், முறையான ஆவணங்களுடன் கூடிய குடும்ப சமரசங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவை என்பதால், வரி அதிகாரிகள் வெறும் மேலோட்டமான விதிகளை மட்டும் பார்க்காமல் பரிமாற்றத்தின் சாராம்சத்தின் உண்மை நிலையை ஆராய வேண்டும் என்பதை இந்த உத்தரவு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சொத்து பரிமாற்றத்தின் போது முறையான ஆவணங்களைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.