டெல்லியில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ‘இன்ட்ராக்ரனியல் ஹெமரேஜ்’ நோயால் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் இருக்கும் ஒருவரின் மனைவியை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலராக உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர் அல்கா ஆச்சார்யா என்ற பெண்மணி தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எனது கணவர் சலாம் கானுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், தொடர்ச்சியாக சுய நினைவற்ற நிலையில்(கோமா) உள்ளார். தனது கணவரின் மருத்துவத் தேவைகள் மற்றும் செலவுகளை நிர்வகிக்க உதவும் வகையில், அசையா மற்றும் அசையும் சொத்துக்கள், நிதி விவகாரங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதிகள் உட்பட அவரது சொத்து தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கணவருக்கு பாதுகாவலராக தன்னை நியமிக்க வேண்டும் என்று மனு தாக்கல்’ செய்தார்.
கடந்தாண்டு பிப்ரவரி 2-ம்தேதி, சலாம் கானுக்கு கடுமையான மூளை ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டு டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அவசர உயிர்காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் பிப்ரவரி 14-ம்தேதி, மேல் சிகிச்சைக்காக, டெல்லி ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், கடந்த ஏப்ரல் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மேலும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதிலிருந்து, சலாம் கான் வீட்டில் அவரது குடும்பத்தினரின் தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் மேற்பார்வையில் இருந்து வருகிறார் என்று வழக்கறிஞர் கூறினார். இருப்பினும், அவரது உடல்நிலை முன்னேற்றமடையவில்லை என்றும், அவர் தொடர்ந்து கோமா நிலையில் இருப்பதாகவும், சுவாசிக்க ஒரு டிரக்கியோஸ்டமி குழாய்(tracheostomy tube) மற்றும் உணவளிக்க ரைல்ஸ் குழாய் (Ryles tube) உடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த நீதிபதி சச்சின் தத்தா கூறுகையில், ‘மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார். மருத்துவ அறிக்கையின் படி, அவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவரது நலனுக்காக, ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமிப்பது அவசியமாகிறது. மனைவி தனது கணவரின் எந்தவொரு அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் அவரது மருத்துவ மற்றும் அன்றாட செலவுகளுக்காகக் கையாள சுதந்திரம் உள்ளதாகக் கூறினார்.
பின்னர் தீர்ப்பு கூறிய நீதிபதி, அந்தப் பெண்ணை தனது கணவரின் சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமித்து, மருத்துவ சிகிச்சை, பராமரிப்பு, தினசரி செலவுகள், நிதி, மேலாண்மை மற்றும் கணவரின் சொத்துக்களைக் கையாள்வது போன்ற பல்வேறு முடிவுகளை எடுக்கும் உரிமையை அவருக்கு வழங்கியது. மேலும், அல்கா ஆச்சார்யா மற்றும் அவரது கணவர் கூட்டாக வைத்திருக்கும் அவரது வங்கிக் கணக்கு, நிலையான வைப்புத்தொகை, பரஸ்பர நிதிகள், கார் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் கையாள அவருக்கு அனுமதி உண்டு என்று கூறினார்.
எனவே, ‘மனுதாரரின் கணவர் மருத்துவ கோளாறு காரணமாக சுயநினைவற்ற நிலையில் இருப்பதால் அவரது மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக இந்த கோர்ட்டு நியமிக்கிறது’ என கூறி உள்ளார்.
தம்பதியரின் இரண்டு குழந்தைகள் தங்கள் தாயை பாதுகாவலராக நியமிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ளனர் என்று அது குறிப்பிட்டது.