கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் இன்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேரைக் காணவில்லை என்ற பகீர் தகவல் வெளியாகிவுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதை அடுத்து கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள அட்டமலை, முண்டக்கை, சூரல்மலை கிராமங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று (ஜூலை 30) அதிகாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் அந்தப் பகுதியில் இருக்கும் இருவழிஞ்சி நதியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 500 குடும்பங்களில் உள்ள 1000 பேர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ உதவி தேவைப்படுகிறது என்று கேரள அரசு கூறியதையடுத்து உடனடியாக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்திய விமானப்படையும் மீட்பு பணிகளில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் மோதி, "கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் கவலையை அளிக்கிறது. அந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கேரள முதல்வரை செல்போனில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் தொடர்பாக பேசியுள்ளேன்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் நிலச்சரவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலச்சரிவு சம்பவம் இந்தியா முழுவதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.