வருகிறது தமிழ்த் திரைப்பட வேலை நிறுத்தம்! தனுஷ் நடிக்கவிருக்கும் படங்களுக்கு செக்?

தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம் - 1
Dhanush
Dhanush
Published on

இந்த ஆண்டு வெளியான படங்களில் ஐந்து அல்லது ஆறு படங்கள் மட்டும் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்திருக்கின்றன. இது இதுவரை நடந்திராத ஒரு வியாபார சரிவு. இவற்றிலும் கூட அரண்மனை 4, மகாராஜா, மற்றும் கருடன் மட்டுமே பெரிய வெற்றிப்படங்கள். மற்ற மூன்று படங்கள் பழுதில்லை என்ற கணக்கில் மட்டுமே தப்பித்து இருக்கின்றன. 

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தியன் 2 மிகவும் மோசமான விமரிசனங்களைப் பெற்று பலத்த தோல்வி அடைந்துள்ளது. மிகப் பெரிய பேனர், பெரிய நடிகர் நடிகைகள், இயக்குனர், கோடிகளில் செலவு, பிரம்மாண்டமான ப்ரோமோஷன்கள் எனப் பல நிகழ்ந்தாலும் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. இவ்வளவுக்கும் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான திரையரங்குகளில் அந்தப் படம் திரையிடப்பட்டிருந்தது. இப்படி 'தியேட்டர் பாம்பிங்' என்று சொல்லப்படும் விதமாக அனைத்து திரையரங்குகளிலும் ஒரே படம் என்பது இப்போது அவர்களுக்கே திரும்பும் ஆபத்தாக அமைந்திருக்கிறது.

ஒரு திரைப்படத்தின் வாழ்நாள் இப்போது முதல் நான்கு நாட்கள் அல்லது வார இறுதிகளில் முடிவடைந்து விடுகிறது. ரிப்பீட்டட் ஆடியன்ஸ் என்று சொல்லப்படும் திரும்பத் திரும்பப் படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விட்டது.

ஆன்லைனில் படம் அதே நாளில் வெளிவருவது. OTT யில் உடனடியாக வந்து விடுவது போன்றவை ரசிகர்கள் படத்திற்கு செல்வத்தைத் தடுக்கும் காரணிகளாக இருக்கின்றன. தமிழ்த் திரைப்பட நடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் சம்பளம் கட்டுக்கடங்காமல் உயர்ந்து இருக்கிறது. இதனால் தயாரிப்புச் செலவுகள் சமாளிக்க முடியாத அளவு கூடியிருக்கிறது. இதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டி அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆடி கிருத்திகை... அண்ணாமலையாரை தரிசனம் செய்த தனுஷ்!
Dhanush

தமிழ்த் திரையுலகினை மறுசீரமைப்பு செய்யச் சில கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதால் வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி முதல், தமிழ் திரைப்பட படப்பிடிப்பு தொடர்பான அனைத்து வேலைகளையும் நிறுத்துவது என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பல சங்கத்தினர் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

புதிய படம் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பின்பே அதை OTT யில் திரையிடப்பட வேண்டும்.

அட்வான்ஸ் பெரும் நடிகர்கள் அந்தத் தயாரிப்பாளர்கள் படங்களை  முடித்த பின்பே பிற தயாரிப்பாளர்கள் படங்களில் ஒப்புக்கொண்டு நடிக்க வேண்டும். தயாரிப்பு முடிந்து வெளியிடமுடியாமல் தேங்கியிருக்கும் படங்களை வெளியிட உதவி செய்ய வேண்டும். சிறிய படங்கள் திரையரங்கு கிடைக்காமல் வெளியாகாத நிலை இருக்கக் கூடாது. இதற்காகப் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகுதான் படப்பிடிப்புகள் ஆரம்பிக்க வேண்டும் என்பதால் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் புதிய படங்கள் துவக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
'ப்ளாக் பஸ்டர்' பிறந்தநாள் பரிசு... மகிழ்ச்சியில் தனுஷ் போட்ட பதிவு!
Dhanush

முக்கிய தீர்மானமாக நடிகர் தனுஷ் ஏகப்பட்ட தயாரிப்பாளர்களின் படங்களில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு ஒப்பந்தமாகியுள்ளார். இனி வரும்காலங்களில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளைத் துவங்குவதற்கு முன்பாகத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளடக்கிய கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகிகள் கூறினர். 

இவர்கள் இப்படி தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொண்டு இருக்க, ஒரு திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும், OTT வியாபாரிகள்குறித்த சில தயாரிப்பாளர்களின் நிலைப்பாடு இன்னும் சற்று கவலைக்குரியதாக இருக்கிறது. அதுபற்றி விளக்கமாக அடுத்தடுத்து பார்க்கலாம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com