இரண்டு நாட்களுக்கு முன்னர் பப்புவா நியூ கினியா நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 ஆயிரம் பேர் மண்ணில் உயிரோடு புதைந்தனர். இதனையடுத்து தற்போது இந்தியா, பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா அருகே உள்ளது. இந்த நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நிலச்சரிவில் புதைந்தவர்களை மீட்டெடுத்தனர். அதில் வெறும் 100 பேர்தான் உயிரோடு புதைந்திருக்கிறார்கள் என்று கணித்தனர். ஆனால், நேரமாக ஆகத்தான் தெரிந்தது, நிலச்சரிவின் கோர முகம்.
ஐநா அதிகாரிகள், மொத்தம் 670 பேர் புதைந்துப் போனதாக தெரிவித்தார்கள். ஆனால், தற்போது வரை இந்த நிலச்சரிவில் சுமார் 2 ஆயிரம் பேர் புதைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இன்றுவரை 2000 பேரை முழுவதுமாக மீட்க முடியவில்லை. எப்படி மீட்பது என்றும் அறியாமல் அதிர்ச்சியில் உறைந்துப் போய் நிற்கிறார்கள், மீட்புக்குழுவினர். பொதுமக்கள் அவரவர்களின் உறவுகளைத் தேடி மீட்டெடுத்து வருகின்றனர்.
மேலும் சில இடங்களில் 30 அடி ஆழத்துக்கு இடிபாடுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த இடங்களில் மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாமல் செய்வதறியாது மீட்பு குழுவினர் தவிக்கின்றனர். தற்போதைய நிலையில் பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையை உறுதியாக சொல்ல முடியாத நிலைமை இருக்கிறது என்கின்றனர் மீட்புக்குழுவினர்.
பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில்தான் அதிகமானோர் புதைந்துள்ளனர். மேலும், மீட்பதற்கான கருவிகளும் இல்லை என்பதே வருத்தத்திற்குறிய விஷயமாகும். சில கருவிகள் வந்ததும் தான் மீட்பு பணிகள் ஆரம்பமாகும் என்று அங்குள்ள செய்திகள் கூறின. அதேபோல் அடுத்தடுத்த இடத்தில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால், விரைவாக மீட்புப் பணியில் இறங்க முடியவில்லை.
அந்தவகையில் இந்திய பிரதமர் மோடி நேற்று இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டார். அதாவது, “பப்புவா நியூ கினியாவில் நடந்த அந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்கின்றேன். காயமடைந்தவர்கள் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். எங்களால் முடிந்த அளவு உதவி செய்கிறோம்.” என்று பதிவிட்டார்.
இதனையடுத்து தற்போது இந்தியா சுமார் 1 மில்லியன் டாலர் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வழங்கியுள்ளது. அதேபோல் பல உலக நாடுகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.