பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் 1ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்து, அடுத்த ஒருநாள் முழுவதும் தியானம் செய்யவுள்ளார் என்று செய்திகள் வந்துள்ளன.
நடப்பு ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே 6 கட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. இதனையடுத்து வரும் ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. கடைசி கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
2024 மக்களவைத் தேர்தலின் பாஜக மீண்டும் தனிப் பெரும்பான்மை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஜூன் ஒன்றாம் தேதி மாலை வெளியாகும் 'எக்ஸிட் போல்' முடிவுகளில் ஓரளவு கணிக்கப்பட்டு விடும். அதன்பிறகு ஜூன் 4ஆம் தேதி செவ்வாய் அன்று மக்களின் தீர்ப்பு என்னவென்று உலகிற்குத் தெரியவரும்.
பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் கடைசி கட்டத்தில்தான் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்தவகையில் அன்றைய நாளில் 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடையும் நிலையில், மோடி அதே தினத்தில் கன்னியாகுமரி வரத் திட்டமிட்டுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளா திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.
அடுத்த மூன்று நாட்கள் தங்கத் திட்டமிட்டுள்ளார். மே 31ஆம் தேதி விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். அங்குள்ள நினைவு மண்டலத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடவுள்ளார். அதுவும் ஒரு நாள் முழுக்க பிரதமர் மோடி தியானம் செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல், 2019 மக்களவை தேர்தலின் போது இறுதி கட்ட பிரச்சாரம் முடிந்ததும், நேராக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றார். பாரம்பரிய உடையில் கேதர்நாத் பனி குகைக்கு சென்று தியானம் செய்தார். சுமார் 30 நிமிடங்கள் வரை தியானத்தில் இருந்தார். கடந்த முறை வடக்கில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தார். தற்போது தெற்கில் தியானம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.
தேர்தல் பணிகளிலும், பிரச்சாரங்களிலும் களைப்புடன் இருந்த அவருக்கு, இந்த தியானம் ஒரு புத்துணர்ச்சியை வளங்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.