
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4' என்ற மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.
இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு ராக்கெட் தயார் நிலையில் இருந்தது. இதில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன், அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் செல்கின்றனர்.
இந்தநிலையில், இந்த ராக்கெட் முதலில் கடந்த மாதம் 29-ந்தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் ராக்கெட்டை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அதில் சில பாகங்களை மாற்ற வேண்டியிருப்பதால் ஏவுதலை கடந்த 8-ந்தேதிக்கு மாற்றி வைத்தனர்.
இந்தநிலையில் மீண்டும் மோசமான வானிலை காரணமாக மீண்டும் தேதி மாற்றப்பட்டு 10-ந்தேதி மாலை 5.52 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், பால்கன்-9 ராக்கெட்டில் முதல் நிலையில் 9 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 5-வது என்ஜினில் ராக்கெட்டுக்கான எரிபொருளான திரவ ஆக்சிஜன் கசிவு இருப்பது விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்தனர். இதனால் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 4-வது முறையாக ராக்கெட் ஒத்திவைத்தது விஞ்ஞானிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணில் ஏவ முடியவில்லை என்றால், மீண்டும் ஜூலை மாதம் 2-வது வாரத்திற்கு பிறகு தான் விண்ணில் ஏவப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.
இதனால் 4-வது முறையில் இந்திய வீரரான சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளிப்பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவரது விண்வெளி பயணம் எப்போது இருக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.