தமிழக அரசு சார்பில் இலவசமாக ஜப்பான் மொழி கற்கும் பாடத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது. இதனையடுத்து தமிழ் வழியில் ஜப்பான் மொழி கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.
ஜப்பானில் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருப்பதால், அங்கு சென்று எளிதில் வேலையைக் கற்றுக்கொள்ளவும், அங்கே தங்கி வாழவும் ஜப்பான் மொழி தேவைப்படும். ஜப்பான் அரசு, பொறியியல், மெக்கானிக், செமி கண்டெக்டர், AI, ML, ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் நர்சிங் போன்ற துறைகளில் சுமார் 18 லட்சம் தகுதி உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.
அதுவும் தேர்வாகும் பட்டதாரிகளுக்கு இந்தியாவில் வாங்கும் சம்பளத்தைவிட 3 முதல் 6 மடங்கு அதிக சம்பளம் கிடைக்கும். பொறியியலில் N2 லெவல் முடித்தவர்களுக்கு 1 வருடத்திற்கு ரூ.21 லட்சம் சம்பளமாக அளிப்பதாக கூறியுள்ளனர். அதேபோல பொறியியல் அல்லாது N4 லெவல் முடித்தவர்களுக்கு வருடம் 12 முதல் 15 லட்சம் வரை ஊதியமாக அறிவித்துள்ளனர்.
இதனால் அங்கு தேர்வாகி வேலை கிடைத்தால் ஜப்பான் மொழி அவசியம் என்பதால், தமிழக அரசின் நான் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் ஜப்பான் மொழி கற்றுக்கொள்ளும் பாடத்திட்டத்தை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ஜப்பான் மொழியை கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அக் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சுமார் 3 மாதங்கள் இலவசமாக ஜப்பான் மொழி கற்றுத்தரப்படும் என்றும், அதற்கான Registration linkஐயும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தினமும் 2 மணி நேரம் வாரம் ஐந்து நாட்கள் இந்த வகுப்பு நடைபெறும். இந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் வகுப்பு ஆரம்பிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வேலைக்காக மொழிக் கற்றுக்கொள்ள பலரும் முன்வருகிறார்கள். ஜப்பான் மொழியை வெளியில் கற்றுக்கொள்ள எப்படியும் அதிகம் பணம் ஆகும், இப்போது இலவசம் என்பதால் ஏராளமானோர் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.