
கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கொண்டுவந்துள்ள திட்டம் தான் எல்.ஐ.சி. பீமா சகி யோஜனா என்ற திட்டமாகும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), LIC பீமா சகி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது காப்பீட்டு துறையில் பெண்கள் கால் பதிக்க உதவும் வகையில் மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட பீமா சகி யோஜனா என்பது பெண்களுக்கான செயல்திறன் சார்ந்த உதவித்தொகை திட்டமாகும். இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது தான்.
எல்.ஐ.சி. பீமா சகி யோஜனா திட்டத்தில் சேர விருப்பமுள்ள 18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு இந்த திட்டத்தில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இது பெண்கள், குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களுக்கு மாதந்தோறும் நிலையான மாத வருமானத்தை வழங்கவும் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். அதே நேரத்தில், பெண்களுக்கு காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் சேரும் பெண்களுக்கு தொழில்முறை பயிற்சி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையும், முகவர்களுக்கான மற்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.
எல்.ஐ.சி. பீமா சகி திட்டத்தின் கீழ், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஏஜென்ட்கள் முதல் 3 ஆண்டுகளுக்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, முதல் ஆண்டில் 7,000 ரூபாயும், இரண்டாம் ஆண்டு 6,000 ரூபாயும், மூன்றாம் ஆண்டு 5,000 ரூபாயும் உதவித் தொகையாக, மாதந்தோறும் வழங்கப்படும்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உதவித் தொகை பெற, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஏஜென்ட் குறைந்தது 24 புதிய காப்பீட்டுக் கொள்கைகளை விற்க வேண்டியது கட்டாயம். அதுமட்டுமின்றி முதல் வருட கமிஷனாக ரூ.48,000 சம்பாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி. பீமா சகி திட்டத்தில் சேர சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி தற்போதைய எல்.ஐ.சி.ஏஜென்ட்கள், எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் (மனைவி, கணவன், குழந்தைகள் உள்பட அனைவரும்), ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்க முடியாது.
இந்தத் திட்டத்திற்கு சேர விருப்பம் உள்ளவர்கள் எல்.ஐ.சி. அலுவலகம் அல்லது அதன் வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ள பெண்கள் இந்த ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
வயதுச் சான்று - பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
முகவரிச் சான்று - ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது மின்சார ரசீது
கல்விச் சான்று - 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமாக விஷயம் என்னவென்றால், விண்ணப்பத்துடன் நீங்கள் இணைக்கும் தகவல்கள் முழுமையடையாமல் இருந்தாலோ அல்லது ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பித்தாலோ உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.