

இந்தியாவின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC)இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India) ஆகும். இது பல்வேறு ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் சேமிப்புத் திட்டங்களை வழங்குகிறது, மேலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு நிதிப்பாதுகாப்பை வழங்குகிறது.
சேமிப்பும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் வேண்டும் என்றால், எல்ஐசி திட்டங்கள் இன்னும் பலரின் முதல் தேர்வாகவே உள்ளன. எல்ஐசி தனது நம்பகத்தன்மை மற்றும் நீண்டகால பலன்களுக்காக பிரபலமானது. தனிநபர் தேவைகளுக்கான பல வகையான பாலிசிகளை (term, whole life, pension, ULIPs) வழங்குகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் எல்ஐசி என்பது இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும், நம்பகமான, அரசு ஆதரவுடைய ஒரு நிறுவனமாகும்.
இந்நிலையில் சமீபத்தில் பியூஷ் டிரேட்ஸ் என்பவர் சமூக வலைதளத்தில் எல்ஐசி குறித்து வெளியிட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
அதாவது, அவரது உறவினர் ஒருவர் 2006-ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எல்ஐசியில் மாதந்தோறும் ரூ.462 முதலீடு செய்து வந்துள்ளார்.
20 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு, இந்தாண்டு முதிர்வுத் தொகையாக அவருக்கு ரூ.1.5 லட்சம் கிடைக்க உள்ளதாகவும், இது பணவீக்கத்தின் விகிதத்தில் பாதியைக் காட்டிலும் மிகவும் குறைவானது என்று அவர் கூறியுள்ளார். அதன் பங்குகள் கூட கடந்த 3.5 ஆண்டுகளில் வெறும் 0.34% வருமானத்தை மட்டுமே கொடுத்துள்ளன.
அவர் இதே தொகையை ஒரு வங்கி வைப்புத்தொகையில்(FD) முதலீடு செய்திருந்தால் அவருக்கு ரூ.2.41 லட்சமும், மியூச்சுவல் ஃபண்டில் (12% வருமானம் எனக்கொண்டால்) ரூ.4.75 லட்சமும் கிடைத்திருக்கும் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். எல்ஐசி பாலிசிகள் அதன் முகவர்களையும் ஊழியர்களையும் மட்டுமே பணக்காரர்களாக்குகின்றன, முதலீட்டாளர்களை அல்ல என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் எல்ஐசி மற்றும் இதுபோன்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் சாதக, பாதகங்களை விரிவாகப் பார்ப்போம்:
எல்ஐசி (LIC) போன்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பு, வரிச் சலுகைகள், மற்றும் பாதுகாப்பான சேமிப்பை அளிக்கும் சாதகங்களைக் கொண்டிருந்தாலும், அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்குக் குறைந்த வருமானம் தருவது, பணத்தை முன்கூட்டியே எடுப்பதில் கட்டுப்பாடுகள் போன்றவை பாதகங்களாகும்.
சம்பந்தப்பட்ட நபர் எல்ஐசியில் மாதந்தோறும் கட்டிவந்த ரூ.462 தொகையில் ஒரு பகுதி ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியமாகவும் (Risk Cover), மற்றொரு பகுதி முகவர் கமிஷன் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கும் பிரிந்து மீதமுள்ள தொகை மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது.
எல்ஐசி பெரும்பாலும் பாதுகாப்பான அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதால், அதில் கிடைக்கும் போனஸ் மிகவும் குறைவாகவே கிடைக்கும். அதாவது, போனஸ் விகிதம் 3% முதல் 5% வரை மட்டுமே இருக்கும். காப்பீடு மற்றும் முதலீடு இரண்டும் இணைந்திருப்பதால், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற திட்டங்களை விட வருமானம் குறைவாக இருக்கலாம்.
பங்குச்சந்தை வீழ்ந்தாலும் அல்லது வங்கி திவாலானாலும், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு அரசு உத்தரவாதம் உண்டு என்ற காரணங்களுக்காகவே குறைந்த வருமானம் கிடைத்தாலும் பாராயில்லை என்று மக்கள் இதில் முதலீடு செய்கிறார்கள். நடுத்தர மக்களிடையே எல்ஐசி ஒரு "Safe Haven" ஆகக் கருதப்படுகிறது. அதேசமயம் ஆயுள்காப்பீடு போன்ற முதலீட்டு காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர் கட்டிய தொகையை விட பல மடங்கு அதிகமான தொகை(Death Benefit) அவரது குடும்பத்திற்குக் கிடைக்கும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் இந்த உடனடிப் பாதுகாப்பு கிடைக்காது.
முதலீடு பழக்கம் இல்லாதவர்களுக்கு எல்ஐசி போன்ற திட்டங்கள் நீண்ட காலத்திற்குப் பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை துண்டுகின்றன.
அதேசமயம் எல்ஐசியில், பிரிவு 80C-ன் கீழ் பிரீமியம் செலுத்துவதற்கும், பிரிவு 10(10D)-ன் கீழ் முதிர்வுத் தொகைக்கும் வரிச் சலுகைகள் உண்டு.
எப்போதும் காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்து பார்ப்பது நல்லது. ஏனெனில் Term Insuranceல் மிகக் குறைந்த பிரீமியத்தில் (உதாரணமாக ஆண்டுக்கு ₹10,000) ரூ.1 கோடி வரை ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக முதலீடாக பார்த்தால் எல்ஐசி நஷ்டமே என்றாலும் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு எல்ஐசியில் பணம் முதலீடு செய்தால் நிச்சயமாக ஒரு தொகை கிடைக்கும். எந்த விதமான நஷ்டமும் ஏற்படாது. பாதுகாப்பானது என்பதால் பணம் தொலைந்து போகாது என்ற நிம்மதி இருக்கும்.
நீங்கள் முதலீடு நோக்கத்தில், அதிக லாபம் எதிர்பார்ப்பவராக இருந்தால், எல்ஐசியை விட மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டெர்ம் இன்சூரன்ஸ் கலவை சிறந்தது என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.
அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், நிதிப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள், மற்றும் வரி சேமிப்புடன் சேமிப்பைத் தொடங்க விரும்புபவர்களுக்கு எல்ஐசி போன்ற திட்டங்கள் ஏற்றவை. நிதிப் பாதுகாப்பு மற்றும் வரித் திட்டமிடலுக்கு எல்ஐசி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
அதாவது, எனக்கு குறைந்த அளவு முதிர்வுத் தொகை வந்தாலும் பரவாயில்லை. எனது பணம் பாதுகாப்பாக வந்தால் போதும் என்று நினைப்பவர்கள் எல்ஐசியில் முதலீடு செய்யலாம். எனக்கு அதிக லாபம் வேண்டும். அதற்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்க நான் தயார் என்று கூறுபவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டெர்ம் இன்சூரன்ஸ்களில் முதலீடு செய்யலாம்.