
நாளைய தேவையைப் பூர்த்தி செய்ய இன்றே முதலீடு செய்வது தான் சிறந்தது. அவ்வகையில் அரசு மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவிக்க பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), பொதுமக்களுக்கு பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது.
பலரும் எல்ஐசி திட்டங்களில் முதலீடு செய்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது எல்ஐசி நிறுவனம். இதன்படி காலாவதியான எல்ஐசி திட்டங்களைப் புதுப்பிக்க மறு வாய்ப்பு ஒன்றை அளிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி பாலிசிகளைத் தொடங்கிய பின் தொடர்ந்து தவணைகளை செலுத்தி வர வேண்டும். ஓரிரு தவணையை செலுத்தத் தவறினால், குறைந்தபட்ச அபராதம் செலுத்தி பாலிசியைத் தொடரலாம். அதுவே பல ஆண்டுகளாக தவணையை செலுத்தாமல் விட்டால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் இந்த பாலிசிகள் காலாவதியாகி விடும். மீண்டும் இதனைத் தொடர்வது கடினமாகும். அதோடு இதுவரை கட்டிய பணமும் வீணாகி விடும். வாடிக்கையாளர்களின் இந்த சிரமத்தைப் போக்க ஒருமாத காலத்திற்கு சிறப்புத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது எல்ஐசி. இதன்படி காலாவதியான தனிநபர் பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
ஆர்வ மிகுதியால் சிலர் எல்ஐசி திட்டங்களைத் தொடங்கி விட்டு, பிறகு தவணைகளை சரியாக செலுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் பணமும் வீணாகி, நேரமும் வீணாகும். இருப்பினும் வாடிக்கையாளர்கள் மத்தியில் சேமிப்பை ஊக்குவிக்கவும், பாலிசிகளின் மூலம் செலுத்திய பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாலிசி புதுப்பிப்புத் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரையிலான ஒருமாத காலத்தில் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்களால் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
காலாவதியான பாலிசிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளது எல்ஐசி நிறுவனம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது பாலிசிகளை உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், பங்குச்சந்தை அல்லது மற்ற முதலீட்டுச் சந்தைகளுடன் தொடர்பில்லாத (Non-Linked) பாலிசிகளுக்கு தாமதக் கட்டணத்தில் 30% வரை அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
மைக்ரோ காப்பீட்டு பாலிசித் திட்டங்களுக்கு தாமதக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை பாலிசி தவணைகளை செலுத்தாத மற்றும் பாலிசி விதிமுறைகளை பூர்த்தி செய்கின்ற காலாவதியான பாலிசிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.