உலகில் பசி தீர்க்கும் உணவு வகைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், இயற்கை அளித்த காய் கனி தானியம் போன்ற மனிதர் கைபடாத மண்ணின் கொடைகளிலும் முதன்மையானது பால் எனும் உயிர் திரவம்தான். பூமியில் பிறக்கும் போதும் மண்ணை விட்டு மறையும் போதும், நம் உணவாக இருப்பதுபால் மட்டுமே. தாய்மையின் புனிதங்களில் ஒன்றான பால் உலகின் பசிக்கு ஆதாரமாகவும் உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க பாலை நினைவு கூர்ந்து நன்றி சொல்ல ஒரு நாள் வேண்டாமா?
பாலின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஐ நா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பில் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன்1 ஆம் தேதியை உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டது. இதன்படி 2001 ஆம் ஆண்டிலிருந்து உலக பால் தினம் இன்று கொண்டாப்பட்டு வருகிறது.
குழந்தை பிறந்த பின் பல காரணங்களால் அதன் தாய்க்கு தாய்ப்பால் சுரக்கவில்லை எனில் அதற்கு மாற்றாக தருவது பசுவின் பால்தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடல் பாதிப்புகளின்போது பாகுபாடின்றி மருத்துவர் பரிந்துரைப்பது பால் மட்டுமே. இப்படி நம் உயிர்காக்கும் பாலில் புரதம் லாக்டோஸ் விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் போன்ற உடல் நலனைக் காக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளது.
உலக அளவில் அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் உணவான பாலை காலை காப்பி, டீயில் துவங்கி வெப்பத்தை தணிக்கும் மோர் உணவின் சுவை கூட்ட பலவிதங்களில் மதிப்பு கூட்டி என்று தினமும் ஏதேனும் ஒரு வகையில் அதன் தேவை இன்றி நமது நாள் கழிவதில்லை. பாலின் வேதியியல் மாற்றங்கள் மூலம் பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணைய், நெய், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பல இணை பொருட்களை பெறலாம் என்பதால் பாலின் உற்பத்தி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5 சதவீதமாக உள்ளது.மேலும் கொழுப்பு நீக்கப்பட்டு பதப்படுத்திய பால் பவுடர் ஏற்றுமதியிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது.
அனைத்து விதமான அமினோ அமிலங்களும் உள்ள பாலை அளவுடன் அருந்துவது நன்மை தரும். உதாரணமாக ஐந்து வயது முதல் நாற்பது வயது வரை உள்ளவர்கள் தினமும் 400 மில்லி வரை அருந்தலாம். இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும் வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் அருந்துவது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பசுவின் பால் மட்டுமின்றி ஆட்டுப்பால். கழுதைப்பால். ஒட்டகப்பால். என பலவித விலங்குகளின் பாலையும் மனிதர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கழுதைப்பால் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என்ற நம்பிக்கை உண்டு. புற்றுநோய் முதல் இருமல் சளி உடல் பருமன் போன்ற அனைத்து விதமான உடல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் நிவாரணியாக விளங்கும் பாலின் பெருமைகளைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
கடவுள் முதல் வறியவர் வரை விரும்பும் பாலை வீணாக்காமல் அதை தேவை உள்ளவர்களுக்கு உணவாக வழங்கினால் சிறப்பு. பாலின் பெருமைகளைப் புரிந்து நடந்து கொள்வோம்.