

பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் மனித நோய்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், ரோகினி நீல்கேனி மூளை, மனநிலை மைய விஞ்ஞானிகளுடன் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுல் மனித மூளை மரபணு குறைபாடு பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, மூளையில் உள்ள ஒரு வகையான கொழுப்பு இயல்பை விட அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொழுப்பு நோயாளிகளிடம் மரபணு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். அதாவது இதற்கு ‘லோவ் சிண்ட்ராம்' (மரபணு குறைபாடு) என்று பெயர். இந்த வகையான மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கு பிறவியிலேயே கண், மூளை, சிறுநீரகங்களை பாதிக்கும்.
இந்த ஆராய்ச்சியில் இந்தியாவில் முதல் முறையாக மூலக்கூறு அளவில் அந்த மரபணு குறைபாட்டை ஆராய ‘செல்லுலர் மாடல் சிஸ்டம்' என்ற ஒரு வகையான ஹார்டுவேர் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பாதிப்பு இதுவரை இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற போதிலும் உலகளவில் இந்த மரபணு குறைபாடு 5 லட்சம் பேரில் ஒருவருக்கு தென்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதுகுறித்து தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் பி.எச்.டி. படித்து வரும் யோஜத் சர்மா கூறுகையில், ‘மூளையில் உள்ள நரம்புக்கும், செல்களுக்கும் இடையே மென்மையான தகவல் தொடர்பு விஷயத்தில் இந்த அதிகமாக காணப்படும் கொழுப்பு தலையிடுகிறது. அது மூளையில் இருக்கும் நரம்பு செல்களை பாதிக்கிறது. இது இன்னொரு வகை மூளை செல் ஆகும். இந்த சமமற்ற ஏற்றத்தாழ்வு சாதாரண மூளை வளர்ச்சியை சீர்குலைக்கிறது’ என்றார்.
கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை தடுக்கக்கூடிய மறுபயன்பாட்டு மருந்தை சோதனையை செய்து பார்த்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி குழு, இந்த மருந்தை பயன்படுத்திய ஒரே வாரத்தில் அந்த கொழுப்பு அதிகரிப்பை தடுத்து கட்டுப்படுத்தியது தெரியவந்தது. ஆராய்ச்சி மையத்தில் செயற்கையாக வளர்க்கப்பட்ட மூளை தனது இயல்பான நிலையை அடைந்தது தெரியவந்ததாக விஞ்ஞானி ரகு பதிஞ்சட் கூறினார்.
இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட தகவல்கள் அரிய மரபணு பிரச்சினைகளை கொண்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றும் என்று கூறிய விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மையத்தில் அந்த நோய் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி இன்னும் அதிகளவில் சோதனை நடத்தினால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் கூறினர்.