

மைக்ரோ பிளாஸ்டிக் என்பது சுற்றுப்புறச் சூழலுக்கான பெரிய அபாயம் என்பதை அனைவரும் அறிவோம்.
ஆனால் இப்போது மனித மூளையில் உள்ள திசுவில் (Tissue) பிளாஸ்டிக் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆகவே இது மனிதர்களுக்கும் பெரிய அபாயம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி எலிஸபத் ரைனர் (Elizabeth Ryznar) என்ற உளவியல் நிபுணர் ஏராளமான தகவல்களைத் தருகிறார். இவர் உளவியல் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுபவர்.
அனைவரும் அறிய வேண்டிய தகவல்களை இவர் பிரபல ஆங்கில உளவியல் பத்திரிகையான “சைக்காலஜி டு டே” இதழில் தெரிவித்துள்ளார்.
முதலில் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
பிளாஸ்டிக் லேசில் கரையாத ஒன்று. 5 மில்லிமீட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் துகள்களை மைக்ரோ பிளாஸ்டிக் என்று கூறுகிறோம். ஒரு மைக்ரோமீட்டருக்கும் குறைவான துகள்களை நானோபிளாஸ்டிக் என்று கூறுகிறோம்.
உணவுப் பதார்த்தங்களை பிளாஸ்டிக்கினாலான பொருள்களில் சேமித்து வைப்பதாலும் அவற்றில் சுட வைப்பதாலும் நானோ பிளாஸ்டிக் உருவாகிறது; நம் உடலில் சேர்கிறது. சிந்தடிக் துணிகளைத் துவைக்கும் போது அவற்றிலிருந்தும் இவை உருவாகின்றன. நீரிலும், ஆகாயத்திலும் காற்றிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் நமது உணவுப் பொருள்களில் தாராளமாகக் கலக்கின்றன.
இவை எப்படி மூளைக்குச் செல்கின்றன?
ரத்தம் – மூளைக்கு இடையே உள்ள சுவர் வலுவானது. சிறிய நானோ பிளாஸ்டிக் துகள்கள் சுலபமாக ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. மூக்கிலிருந்தும் இவை நேரடியாக உள்ள ஒரு பாதையின் வழியே மூளைக்குச் செல்கின்றன.
இவை மூளைத் திசுவில் சேர்ந்தால் என்ன நடக்கும்?
இவை உடலில் வீக்கத்தை அதிகப்படுத்தும். “ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்” என்பதையும் உருவாக்கும். இவை பார்கின்ஸன் மற்றும் அல்ஜெமிர் வியாதிகளை உருவாக்க உதவும். இதைப் பற்றிய ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருக்கின்றன.
சரி, இதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்வது?
நல்ல கேள்வி. முதலில் பிளாஸ்டிக்கிலான எந்தப் பொருளிலும் எதையும் சூடாக்கக் கூடாது. கண்ணாடி, செராமிக் பாத்திரங்களில் சூடாக்கலாம்.
சில டீ பாக்கெட்டுகளைப் பற்றியும் உஷாராக இருப்பது சிறந்தது.
உணவுப்பொருள்களை வைத்திருக்க எவர்சில்வர் பாத்திரங்களை உபயோகிப்பது சிறந்தது. அல்லது கண்ணாடிப் பொருள்களிலும் வைத்துக் கொள்ளலாம்.
வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ளல் இன்றியமையாதது. வீட்டிற்குள் தூசி நுழைவதைத் தடுக்க வேண்டும். அடிக்கடி ‘மாப்’ செய்யலாம்; பெருக்கலாம்.
குழந்தைகளுக்கு நிச்சயமாக பிளாஸ்டிக்கினால் ஆன விளையாட்டுச் சாமான்களை வாங்கித் தரவே கூடாது. அவற்றை வாயில் வைத்துக் கொள்ளும்படியான எதையும் தரவே கூடாது.
துணிகளைத் தேர்ந்தெடுக்கும் போது நீடித்து உழைக்கும் நேச்சுரல் ஃபைபரில் ஆன துணிகளை மட்டுமே வாங்க வேண்டும். பிளாஸ்டிக் இருக்கும் சிந்தடிக் துணிகளை வாங்கக் கூடாது.
நமது மனதில் எழும் சந்தேகங்களுக்கெல்லாம் இப்படி அருமையாக பதிலைக் கூறி மைக்ரோ பிளாஸ்டிக் மூளையில் ஏற்படுத்தும் அபாயங்களைச் சுட்டிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் எலிஸபத் ரைனர்.