

தேசிய அளவிலான அரசு போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசியவிடுவோர் மீது கடும் தண்டனை வழங்கும், ‘பொதுத்தேர்வுகள் முறையற்ற வழிமுறைகள் தடுப்பு திருத்த மசோதா’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சிஜேபி அமைப்பின் தலைமையில் நடைபெற்ற தொடர் மாணவர் போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 25-ம்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் தீவிரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது வினாத்தாள் கசிவுக்கு எதிராக மத்திய அரசு விரைவு நீதிமன்றம் அமைப்பதாகவும், தண்டனையை அதிகப்படுத்துவதாகவும் கூறியது. இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026 தயாரிக்கப்பட்டது.
இந்தியாவில் நீட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட முக்கியப் போட்டித் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தில் மேலும் பல கடுமையான பிரிவுகளை சேர்த்து 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' (Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026) என்ற புதிய மசோதா மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 27-ம்தேதி) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீது நேற்று (ஜூலை 28-ம்தேதி) பகல் தொடங்கி விவாதம் இரவு 11 மணி வரை நீடித்தது.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் விவாதத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாதி சார்பில் அகிலேஷ் யாதவ், திமுக சார்பில் தயாநிதி மாறன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இன்றும் (ஜூலை 29) இந்த மசோதா மீதான விவாதம் தொடர்ந்த நிலையில், பிற்பகல் இறுதியாக 3 மணியளவில் மக்களவை உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ‘பொதுத் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று நிறைவேற்றப்பட்டதும், மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா (அமலுக்கு வந்தால்) வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.10 கோடி வரை அபராதம் மற்றும் தவறு செய்யும் தேர்வு நடத்தும் நிறுவனங்களுக்கு 8 ஆண்டுகள் தடை போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
* முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 50 லட்சம் வரை அபராதம்.
* குற்றத்தில் உடந்தையாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்படும்.
* ஆள்மாறாட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறைகேடு கூட்டங்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 10 கோடி வரை அபராதம்.
* தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகள் வினாத்தாள் கசியவிட்ட புகாரில் சிக்கினால், 5 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.
* அந்நிறுவனம் பொதுத் தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும். அதாவது 8 ஆண்டுகள் வரை பொதுத் தேர்வு நடத்த தடை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
* புதிய மசோதாவின் மிக முக்கியமான அம்சம், வினாத்தாள் கசிவு வழக்குகள் அனைத்தையும் காவல்துறை அல்லது சிறப்புப் பணிக்குழு 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்பதாகும்.
* விரைவான விசாரணை மற்றும் நீதி வழங்க மத்திய அரசுக்கு சிறப்புப் பணிக்குழு (STF) அமைக்க அதிகாரம்.
* ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களில் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.
* குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* விரைவு நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீட்டு மனுக்களும் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.