நாளை நீட் மறுதேர்வு: மாணவர்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள் மற்றும் கடைசி நேர டிப்ஸ்!

வினாத்தாள் கசிவு புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு நாளை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் நடைபெறுகிறது.
நீட் மறுதேர்வு
நீட் மறுதேர்வு
Updated on

நீட் தேர்வு என்பது நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே வழிமுறை என்பதால், மருத்துவ மாணவர்களின் கல்விப் பயணத்தில் இந்தத் தேர்வு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தங்கள் மருத்துவ கனவை அடைய ஒவ்வொரு மாணவரும் தேர்வுக்காக அர்ப்பணிப்புடன் படிக்கிறார்கள், லட்சக்கணக்கான தேர்வர்கள் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களுக்காகப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

2026 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு புகார் காரணமாக கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET UG) தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நாளை ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. இந்த மறுதேர்வு மதியம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் நடைபெற உள்ளதால் மாணவர்கள் இதற்காக தயாராகி வருகின்றனர்.

நீட் தேர்வுக்குத் தயாராகும் போது மாணவர் செய்யக்கூடிய கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டிய சில தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் இங்கு.

பாடத்திட்டத்தை புறக்கணித்தல் பதில்களை தவறவிடும் :

நீட் தேர்வில் சிறந்து விளங்க, கருத்துகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தி முழு பாடத்திட்டத்தையும் படிப்பது அவசியம். பல மாணவர்கள், எளிதில் புரியக்கூடிய அல்லது தங்களுக்குச் சுவாரஸ்யமாகத் தோன்றும் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அத்தகைய தலைப்புகளில் கவனம் செலுத்துவது, நீட் தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான அத்தியாயங்களைப் புறக்கணிக்க வழிவகுக்கும்.

சவாலான கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பது அவசியம். அதற்கு நீங்கள் சமீபத்திய நீட் பாடத்திட்டத்தின்படி படித்து, அதற்கேற்ப உங்கள் படிப்பு அட்டவணையை வடிவமைக்க வேண்டும். இது கற்றலில் ஒரு சமச்சீரான அணுகுமுறையை அளித்து, நல்ல மதிப்பெண்ணைப் பெற வழிவகுக்கும்.

தேர்வு என்றாலே நேர அட்டவணையைப் பயன்படுத்துவது முக்கியம் :

காலம் ஒருபோதும் நிற்பதில்லை. கால அட்டவணையைப் பின்பற்றாமல் படித்தால், நிச்சயம் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். நீட் தேர்வுத் தயாரிப்பிற்கு ஒரு முறையான கால அட்டவணையைத் தயாரித்து, அதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இது, இறுதித் தேர்வுக்கு முன்பு உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், உங்கள் பலவீனங்களைச் சரிசெய்யவும் உதவும்.

NCERT புத்தகங்களைப் புறக்கணித்தல் கூடாது :

சில மாணவர்கள் நீட் தேர்வுத் தயாரிப்பிற்கு என்சிஇஆர்டி புத்தகங்கள் பயனற்றவை என்று கருதுகின்றனர். அவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கு மற்ற பாடப் பிரிவுகளையும் குறிப்புப் புத்தகங்களையும் பயன்படுத்துகின்றனர். அது உண்மையல்ல. பகுப்பாய்வின்படி, நீட் தேர்வு வினாத்தாள்களில் 70% கேள்விகள் என்சிஇஆர்டி புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், என்சிஇஆர்டி ஒவ்வொரு தலைப்பையும் அதன் அடிப்படைகளைத் தெளிவுபடுத்தி ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் விளக்குகிறது என்பதால் இதில் அதிக கவனம் தேவை.

நீட் தேர்வுத் தயாரிப்பிற்கு NCERT புத்தகங்களையும் மற்ற துணைப் புத்தகங்களையும் சேர்த்துப் பயன்படுத்துவது பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று உங்கள் கருத்துருக்களை வலுப்படுத்தும், மற்றொன்று போதுமான பயிற்சியை அளித்து உங்கள் வேகத்தையும் தெளிவையும் மேம்படுத்தும்.

பெரும்பாலான மாணவர்கள் செய்யும் தவறு இதுதான். இந்த கவனக்குறைவான செயலால் தவறான விடையை எழுத நேரிடுகிறது. எனவே, அனைத்து கேள்விகளையும் அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுடன் கவனமாகப் படித்து புரிந்துகொண்டு விடை எழுத வேண்டும்.

வினாக்களுக்கு விடையளிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வேகமாக பதிலளிப்பது அவசியம். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சீரான வேகத்தில் விடை எழுத பயில வேண்டும்.

தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் என்பதால், பதில் தெரியாத கேள்விகளுக்கு ஊகித்து பதில் எழுதுவது பெரிய தவறு. பதில் தெரியவில்லை என்றால் அந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்ல வேண்டும். ஊகித்து பதில் எழுதுவது கூடாது.

NEET
NEET credits: Mint

தவிர்க்க வேண்டியவை :

தேர்வு மையம் செல்லும் போது கைக்கடிகாரங்கள் , கைப்பேசி , ப்ளூடூத், கால்குலேட்டர் மற்றும் எந்தவித மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் பெரிய பொத்தான்கள் கொண்ட ஆடைகள், தொப்பிகள், மற்றும் உலோக நகைகளையும் அணியக்கூடாது.

OMR விடைத்தாளில் கேள்விகளைத் தவறாகக் குறிப்பது பெரும் மதிப்பெண் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. . அதிவேகமாக எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பது கூடாது. ஏனெனில் எதிர்மறை மதிப்பெண்கள் இருப்பதால், தெரியாத கேள்விகளுக்குத் தோராயமாகப் பதிலளிப்பதைத் தவிர்ப்பது மிக அவசியம்.

தவிர்க்க வேண்டியதைப் பார்த்தோம்..

இப்போது நீட் (NEET) தேர்வில் வெற்றி பெற நீங்கள் படிக்கும் முறையோடு சேர்த்து தேர்வு எழுதும் முறை, நேர மேலாண்மை மற்றும் தேர்வு மைய விதிமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . மேலும் அவசியம் தேவையானவற்றை இங்கு காண்போம்.

தேர்வு மைய வழிகாட்டுதல்கள் படி தேவையான முக்கிய ஆவணங்களை முன்னரே தயார் செய்து கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் மற்றும் தபால் அட்டை அளவிலான புகைப்படங்கள் மற்றும் அரசு அங்கீகரித்த அடையாள அட்டை (ஆதார் அட்டை, பான் கார்டு போன்றவை) ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஹால் டிக்கெட்டில் உரிய இடத்தில் புகைப்படங்களை ஒட்டி, கைரேகை மற்றும் தேர்வரின் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.

தேர்வு முறை மற்றும் நேர மேலாண்மைகேள்வித்தாள் அமைப்புகளை தெள்ளத் தெளிவாக புரிந்து கிடைக்கும் நேரத்தில் தேர்வை முடிப்பது நல்லது. உதாரணமாக ஒவ்வொரு பாடத்திலும் பிரிவு A மற்றும் பிரிவு B என இரண்டு பிரிவுகள் உள்ளன. பிரிவு B-யில் கேட்கப்படும் 15 கேள்விகளில் ஏதேனும் 10 கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது. எனவே கிடைக்கும் மதிப்பெண் விபரங்களை கவனத்தில் வைத்து உறுதியாகத் தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பது புத்திசாலித்தனம்.

முதலில் எதைத் தொடங்குவது என்ற தெளிவுடன் உயிரியல் (Biology) பாடத்தை முதலில் தொடங்குவது சிறந்தது. இது கோட்பாடு சார்ந்த பாடமாக இருப்பதால் குறைந்த நேரத்தில் முடிக்க முடியும், இது தேர்வின் மீதான நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும். இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) பாடங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய மற்றும் கவனம் கொள்ளக்கூடிய விஷயங்களுடன் மனதில் தேர்வு குறித்த அச்சமின்றி வெற்றி நிச்சயம் என்ற பாஸிடிவ் எனர்ஜியுடன் இந்த சவாலான தேர்வை எதிர்கொள்ள வேண்டியது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
இனி வீட்டு வரி பெறுவது ஈஸி! வெறும் 2 நிமிடத்தில் உங்கள் போனில் டவுன்லோட் செய்யலாம்..!
நீட் மறுதேர்வு
logo
Kalki Online
kalkionline.com