அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் தயாரித்த ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களால் இரண்டு பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை பாட்டில்களை திரும்பப்பெறுவதாக அறிவித்திருக்கிறது வால்மார்ட் நிறுவனம்.
உலகின் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான வால்மார்ட் அமெரிக்காவை தலைமையகமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒரு பொருள்தான் “Ozark Trail 64 oz” என்ற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்.
இந்த 64 அவுன்ஸ் கொள்ளளவு கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள், சில்வர் நிற அடிபாகத்தையும், கருப்பு நிற திருகு மூடியையும் கொண்டுள்ளன. பாட்டிலின் ஓரத்தில் Ozark Trail லோகோ பொறிக்கப்பட்டிருக்கும். 83-662 என்ற மாதிரி எண் (Model Number) இந்த பாட்டில்களின் பேக்கேஜிங்கில் அச்சிடப்பட்டிருக்கும்.
2017 ஆம் ஆண்டு முதல் வால்மார்ட் கடைகளிலும், வால்மார்ட் ஆன்லைன் தளத்திலும் சுமார் 15 டாலர் விலையில் இவை விற்கப்பட்டு வந்துள்ளன. இந்த பாட்டில்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒலிம்பியா டூல்ஸ் இன்டர்நேஷனல் இன்க். (Olympia Tools International Inc.) நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நுகர்வோர் பொருட்கள் பாதுகாப்பு ஆணையம் (CPSC) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த Ozark Trail தண்ணீர் பாட்டில்களில் உணவுப் பொருட்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள் அல்லது பால், ஜூஸ் போன்ற எளிதில் கெட்டுப்போகும் பானங்களை நீண்ட நேரம் சேமித்து வைத்த பின்னர் திறக்க முயற்சிக்கும் போது, பாட்டிலின் மூடி திடீரென அதிக விசையுடன் வெளியேறும் ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூடி வெளியேறி முகத்தில் தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் கண்களில் பலத்த அடிபட்டு நிரந்தரப் பார்வையிழப்பை சந்தித்ததாகவும் CPSC உறுதிப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த பாட்டில்களை தங்கள் அருகிலுள்ள வால்மார்ட் கடைக்குத் திரும்பக் கொண்டு சென்று முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். மேலும் தகவல்களுக்கு, வால்மார்ட்டின் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை எண் 800-925-6278 ஐத் தொடர்பு கொள்ளலாம் அல்லது Walmart.com/recalls என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த "Ozark Trail 64 oz" ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்! தயவுசெய்து இந்த பாட்டில்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்.