

தமிழகத்தில் பல ஆண்டு காலமாகவே லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை எப்போது படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஓணம், விசு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களை ஓட்டி பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் வெளியிடப்படும். அதற்கு பலகோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்படுவதால் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
அந்த வகையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட் ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் ஜனவரி 24-ம்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் எக்ஸ்.சி. 138455 (XC 138455) என்ற எண்ணுக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த டிக்கெட் கோட்டயத்தில் விற்கப்பட்டது தெரியவந்தது. இருப்பினும் பரிசு பெற்றவர் யார் என்பது குலுக்கல் முடிந்து ஒருமாதம் ஆகியும் தெரியவில்லை.
பரிசு விழுந்தவருக்கு உறவினர்கள் தொல்லை கொடுப்பார்கள் என்பதால் ரகசியமாக வந்த பரிசை வாங்கி சென்றிருக்கலாம் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக எர்ணாகுளத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சஜிமோன், கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை தானே வாங்கியதாகவும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவருக்கு நெய் பிரசாதம் அனுப்பும் போது அதை கவரில் வைத்து தெரியாமல் அனுப்பி விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பரிசுத்தொகையை மறுஉத்தரவு வரும் வரை வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
பணி ஓய்வுக்கு பிறகு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி சஜிமோன், சபரிமலை சீசன் சமயத்தில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலரை தனது வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர்களில் ஒருவர் தவறுதலாக நெய் பிரசாத டப்பாவினை வாகனத்திலேயே விட்டு சென்றிருக்கிறார். உடனே சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியிருக்கிறார். இதற்கிடையே லாட்டரியை வாங்கிய சஜிமோன், நெய் பிரசாத பையுடன் வைத்து பரிசு விழ வேண்டும் என்று இறைவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் ஞாபக மறதியில் விசாகப்பட்டினத்திற்கு கூரியர் அனுப்பியபோது தவறுதலாக லாட்டரி சீட்டையும் சேர்த்து அனுப்பி விட்டார். இதற்கிடையே கீழே தவறி விழுந்ததில் பலத்த படுகாயம் அடைந்த சஜிமோன் சுமார் ஒருவார காலம் சுயநினைவின்றி இருந்துள்ளார். பின்னர் நினைவு திரும்பியதும் லாட்டரி டிக்கெட்டை கூரியருடன் சேர்த்து அனுப்பியது ஞாபகத்திற்கு வந்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது லாட்டரி டிக்கெட் எதுவும் இல்லை என்று அவர் சொல்ல கடைசியில், கூரியர் ஊழியர்கள் திருடியிருக்கலாம் என நினைத்து போலீசில் புகார் கொடுக்க, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதற்கிடையே முதல் பரிசு விழுந்த டிக்கெட்டின் நகலையும் கேரள அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக கூறும் சஜிமோன் தனது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை அதன் பின்புறம் எழுதி வைத்திருப்பதாகவும், எனவே டிக்கெட்டுக்கு பரிசு கேட்டு யார் உரிமைய கோரினாலும் அது தன்னுடையது என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ரூ.20 கோடி முதல் பரிசை வழங்க கேரள அரசுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு முதல் பரிசு கிடைத்ததாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் அந்த லாட்டரி சீட்டை ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநில லாட்டரி இயக்குனருக்கு, உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்பிய நிலையில் கேரள லாட்டரி இயக்குனரகம் இது தொடர்பாக அளித்த அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், சஜிமோன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், லாட்டரி சீட்டு கைவசம் வைத்து இருந்த அந்த நபருக்கு முதல் பரிசு ரூ.20 கோடி வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.
மாநில லாட்டரி இயக்குநரால் சீல் வைக்கப்பட்டு கவரில் சமர்ப்பிக்கப்பட்ட டிக்கெட் நீதிமன்றத்தில் திறக்கப்பட்டது. டிக்கெட்டின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் அப்படியே இருப்பதாகவும், அதில் முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.
துறையின் அறிக்கையின்படி, டிக்கெட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் அப்படியே இருந்தன, மேலும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உயர்நீதிமன்றம் கண்டறிந்தது.
சஜிமோன் தனது மனுவில், டிக்கெட் காணாமல் போவதற்கு முன்பு டிக்கெட்டின் பின்புறத்தில் தனது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதியதாகக் கூறியிருந்தார். இருப்பினும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட டிக்கெட்டில் அத்தகைய எழுத்து எதுவும் இல்லை.
மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், பம்பர் பரிசு வழங்குவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் கேரள லாட்டரித் துறை அசல் டிக்கெட்டை சமர்ப்பித்த நபருக்கு ரூ.20 கோடி முதல் பரிசை வழங்குவதைத் தொடர அனுமதித்துள்ளது.
இதனை பலரும் விமர்சிக்கிறார்கள். ஏனெனில் சட்டப்படி பார்த்தால், பரிசு விழுந்த லாட்டரி சீட்டு யார் கையில் இருக்கிறதோ, அவரே அதன் உரிமையாளர் எனக் கருதப்படுவார். அப்படித்தான் தீர்ப்பு வந்தள்ளது.
இனிமேல் இதுபோன்ற பிரச்சனை வராமல் இருக்க யாராவது லாட்டரி சீட்டு வாங்கியவுடன் அதன் பின்பக்கத்தில் உங்கள் பெயர், முகவரி மற்றும் கையெழுத்து மற்றும் சீட்டைத் தெளிவாக ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. அப்படிச் செய்தால், வேறு யாராவது அந்தச் சீட்டை எடுத்தாலும் உங்கள் கையெழுத்து இருப்பதால் அவர்கள் எளிதில் பணமாக்க முடியாது.
சட்டபடி தெளிவாக சொல்வதென்றால், லாட்டரித் துறையைப் பொறுத்தவரை ‘யாரிடம் பரிசு விழுந்த லாட்டரி சீட்டு இருக்கிறதோ, அவரே வெற்றியாளர்’. சீட்டைத் தொலைத்தவர் அதற்கான ஆதாரங்களுடன் (புகைப்படம், வாங்கிய கடையின் ரசீது) உடனடியாகத் தடுத்தால் மட்டுமே, பரிசு தொகையை பெற முடியும். இல்லையெனில் கண்டெடுத்தவருக்கே அந்தப் பரிசு போய்சேரும். அப்படித்தான் கேரளாவில் லாட்டரி சீட்டுக்கான பரிசு போயிருக்கிறது.
20 கோடி ரூபாயை லாட்டரியில் வென்றவரின் இந்த கதை ஒரு கிரைம் திரில்லர் படத்திற்கு கொஞ்சமும் குறையாத சுவாரஸ்ய திருப்பங்களுடன் கேரளா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளது.