ஹீமோகுளோபின் குறைவா இருக்கா? மலை கிராம மக்களுக்கு ரத்த பரிசோதனை!
- தா. சரவணா
தமிழகத்தில் குறிப்பாக மலைக்கிராம மாணவ, மாணவிகளுக்கு மரபணுக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. அதாவது, ஆண்களின் ரத்தத்தில் 13 அல்லது 14 ஹீமோகுளோபின், பெண்களுக்கு 12 என்ற அளவில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இதற்கு குறைந்து காணப்பட்டால், அவர்களுக்குத் தெரியாமலே மரபணுக்குறைபாட்டால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தலசீமியா, சிக்கில் செல் போன்ற மரபணு பிரச்னைகள் ஏற்படும். இதில் சிக்கில் செல் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சோகை, மூட்டு வலி, ரத்த குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதன் ஆபத்தை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன்படி, 40 வயது வரை உள்ள இரு பாலரின் ரத்தம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதில் ஹீமோகுளோபின் அளவு மற்றும் மரபணுக்குறைபாடு உள்ளதா? என சோதனைக்குள்ளாக்கப்படும். சோதனையில், பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்யப்படும். பின்னர் பாதிப்புக்குள்ளாவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு, இந்தப் பிரச்னையில் இருந்து வெளியேற ஆலோசனை வழங்கப்படும். இதற்கு மருந்து, மாத்திரைகள் கிடையாது.
மேலும் தலசீமியா, சிக்கில் செல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு மரபணு அடையாள அட்டைகள் வழங்கப்படும். அவர்கள் திருமணத்தின் போது, தாங்கள் திருமணம் செய்யும் எதிர் பாலினத்தவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து, அவர்களுக்கு மரபணு பிரச்னை இல்லை என முடிவு வந்தால் மட்டுமே அவர்களுக்கு இடையே திருமணம் செய்ய வேண்டும்.
இந்த வகையில் மலைக்கிராமங்கள் அதிகம் உள்ள திருப்பத்துார் மாவட்டத்தில் திருப்பத்துார், ஆலங்காயம் வட்டரங்களைச் சேர்ந்த 10 முதல் பிளஸ்1 படிக்கும் 470 மாணவ, மாணவிகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதில், 37 பேர்களுக்கு தலசீமியா பாதிப்பு உறுதி, 37 பேர்களுக்கு லேசான தலசீமியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மரபணு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, மருத்துவ ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நல் வாய்ப்பாக யாருக்கும் சிக்கில் செல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட வில்லை. இதே போலத்தான் தமிழகம் முழுவதும் உள்ள
மலைக்கிராம மக்களுக்கு ரத்த பரிசோதனை பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

