ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, தற்போது இடைத் தேர்தலுக்கான தேதி வெளியாகியுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட சில முக்கிய நபர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய அதிபர் உட்பட 8 பேர் பலியாகினர். இதனால், இந்தியா முழுவதும் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த விபத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று சில உலக நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால், இஸ்ரேல் அதற்கு சத்தியம் செய்து மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நேரத்தில் 30 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் விசாரணையில் நிறைய விஷயங்கள் மர்மமாக இருப்பதாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், இவரின் இறப்பு செய்திக் கேட்டு ஈரான் நாட்டின் ஒரு பகுதி மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதுகுறித்து அவர்கள் X தளத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இவரின் ஆட்சி குறித்தே அவர்கள் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆகையால், இவரின் இறப்பில் மர்மம் சூழ்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
ஈரான் அதிபரின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மஷாதில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஈரானிய ஊடக அறிக்கைகளின்படி, செவ்வாயன்று தப்ரிஸில் முதல் இறுதி சடங்கு நடைபெறும். அதன்பிறகு, ரைசியின் உடல் தலைநகர் தெஹ்ரானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் மஷாதில் அடக்கம் செய்யப்படும்.
முன்னதாக நேற்று, ஈரான் தனது அனுபவமிக்க அலி பகேரியை தற்காலிக வெளியுறவு அமைச்சராக நியமித்தது. அதேபோல், துணை அதிபராக இருந்த முகமது மொக்பர் தேர்தல் நடைபெறும் வரை அதிபராக இருக்கப் பதவியேற்றார்.
56 வயதான பகேரி, மறைந்த வெளியுறவு மந்திரி அமீர்-அப்துல்லாஹியனின் துணைத் தலைவராக பணியாற்றினார். இதனையடுத்து ஈரானின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு நாட்டின் அதிபர் இறந்தால் 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.