

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்த போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்ட போது, இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வணிக சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது மத்திய அரசு. இதன்படி முன்பதிவு செய்யும் கால அளவு உயர்த்தப்பட்டது.
நகர்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதோடு கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பதைத் தடுக்க ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயம் இ-கேஒய்சி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் ஆனலைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இ-கேஒய்சி செய்தனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று இ-கேஒய்சி செய்யும் கால அவகாசத்தை ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
எல்பிஜி சிலிண்டரை வாங்கும் இண்டேன், பாரத் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் அனைவரும், ஆதார் கார்டு அடிப்படையிலான முக அங்கீகார ‘இ-கேஒய்சி’-யை வருகின்ற ஆகஸ்ட் 23-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் பெயரில் இருக்கும் கேஸ் இணைப்புகள், ஒரே முகவரியில் இருக்கும் போலியான மற்றும் கூடுதல் இணைப்புகளைக் கண்டறிந்து, அவற்றை முற்றிலுமாக நீக்குவதே முதன்மை நோக்கமாகும்.
அரசு மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு, சிலிண்டருக்கான அரசு மானியம் நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த சிலிண்டர்களை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள இ-கேஒய்சி சரிபார்ப்பு குறித்த விழிப்புணர்வை குறுஞ்செய்தி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்துகின்றன.
ஆன்லைன் முறையில் இ-கேஒய்சி செய்வது எப்படி?
* ஆன்லைனில் இ-கேஒய்சி செய்ய உங்கள் கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
* நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி (IndianOil One, HP Pay மற்றும் Bharat Gas) மற்றும் Aadhaar FaceRD என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
* பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஒடிபி மூலம் உள்நுழைய வேண்டும்.
* முகப்புப் பக்கத்தில் உள்ள ‘LPG e-KYC’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* இதில் உள்ள நிபந்தனைகளைப் படித்துவிட்டு ஒப்புதல் அளித்து, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.
* முகம் ஸ்கேன் வெற்றிகரமாக முடிந்ததும், e-KYC விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆஃப்லைனில் இ-கேஒய்சி செய்வது எப்படி?
* ஆன்லைனில் இ-கேஒய்சி செய்ய சிரமப்படுபவர்கள், ஆஃப்லைன் முறையில் எளிதாக செய்யலாம்.
* சிலிண்டர் பதிவு செய்யப்பட்டுள்ள கேஸ் விநியோக அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
* அங்கீகரிக்கப்பட்ட இயந்திரத்தின் மூலம் விழித்திரை கைவிரல் ரேகையைப் பதிவு செய்து உடனே e-KYC செய்து விடலாம்.
* கேஸ் விநியோக அலுவலகத்திற்கு செல்லும் போது ஆதார் கார்டு மற்றும் கேஸ் புக் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.